ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் சரியான விடை கொண்டு
திருத்தவில்லை அதனால் பலர் பாதிக்கப்பட்டதாகவும் மீண்டும் சரியான விடைகள்
கொண்டு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து
தேர்வர்கள் பலர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு
ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 17 மற்றும் 18 தேதிகளில்
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை 2
லட்சத்து 67 ஆயிரம் 950 பேர் 677 மையங்களில் எழுதினார்கள். இவர்களில் 17
ஆயிரத்து 974 பேர் மாற்றுத்திறனாளிகள். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை 4
லட்சத்து 11 ஆயிரத்து 600 பேர் 1060 மையங்களில் எழுதினார்கள்.
தேர்வு எழுதியபோது வீடியோ எடுக்கப்பட்டது.
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு கடந்த 5–ந்தேதி வெளியிடப்பட்டது. ஆனால்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வினா–விடைக்கும் தேர்வு எழுதியவர்கள் கருதும்
விடைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.
இதனால் தேர்வர்களுக்கு 10 மதிப்பெண் கிடைக்கவில்லை. 3 மதிப்பெண்
கிடைக்கவில்லை. 5 மதிப்பெண் கிடைக்கவில்லை என்று பல்வேறு தேர்வர்கள்
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தினமும் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
தினமும் போராட்டம்
தினமும் 100–க்கும் மேற்பட்டவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு
முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாள் வருபவர்களும் வேறு
வேறு ஆகும். அதுபோல நேற்றும் 100–க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்
செய்தனர்.
ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் மதுரையைச்சேர்ந்த ஒருவர் கூறியதாவது:–
ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்விற்கு உரிய விடைகளை
இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால் பல கேள்விகளுக்கு அரசு பாடப்புத்தகத்தில்
உள்ள விடைகள்படி தான் எழுதி உள்ளோம். ஆனால் அந்த விடைகள் சரி இல்லை என்று
ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது. அரசு பாடப்புத்தகத்தில் உள்ள விடைகளை
ஆசிரியர் தேர்வுவாரியம் ஏற்காதது மர்மமாக உள்ளது.
எங்கள் கோரிக்கைகளை யாரும் கேட்பாறில்லை. ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு
சென்று மனு கொடுத்தால் அங்கு உள்ள அலுவலக உதவியாளர் தான் வாங்குகிறார்கள்.
அதிகாரிகள் யாரும் எங்களை பார்த்து பேசவும் இல்லை. ஆசிரியர் தேர்வு வாரிய
தலைவரையோ அல்லது உறுப்பினரையோ பார்க்கமுடிவதில்லை. அதுவும் அலுவலக
உதவியாளர்கள் இங்கு ஏன் வருகிறீர்கள் என்று கேட்டு வேண்டா வெறுப்பாக
நாங்கள் கொடுக்கும் மனுக்களை வாங்குகிறார்கள். எனவே இனிமேல் நீதிமன்றத்தை
அணுகுவதை தவிர வேறு வழி இல்லை.
முதல்–அமைச்சர் தீர்வு காணவேண்டும்
இந்த பிரச்சினையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலையிட்டு எங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சில தேர்வர்கள் ‘ஆசிரியர் தேர்வு வாரியம் சரியான விடையை கொண்டு
மதிப்பீடு செய்திருந்தால் நான் தேர்ச்சி பெற்றிருப்பேன்’ என்று அழுதுகொண்டே
தெரிவித்தனர்.