ஒரே பள்ளியில் பணிபுரியும் 10 ஆசிரியர்களை,
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறவில்லை என்ற காரணத்துக்காக பணி நீக்கம்
செய்ய, ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தகுதி தேர்வில்
வெற்றி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2012 ஆகஸ்ட்
முதல் 3 முறை தகுதி தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தேர்வு எழுதினாலும்,
சில ஆயிரம் பேர் தான் வெற்றி பெற்றுள்ளனர். பணி நியமனம் செய்யப்பட்ட
நாளில் இருந்து 5 ஆண்டுக்குள் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற
நிபந்தனையின்படி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள்
நியமிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் பணிபுரியும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத
ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய, பள்ளி கல்வி இயக்குனர் கடந்த 7ம் தேதி
உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, ஆசிரியர்களும், பள்ளி
நிர்வாகம் சார்பிலும் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, பள்ளி கல்வி
இயக்குனரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.தஞ்சாவூர் கல்யாணசுந்தரம்
மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஆறுமுகம் உள்பட 10 ஆசிரியர்கள், ஐகோர்ட்
கிளையில் மனு தாக்கல் செய்தனர். ஆறுமுகம் தனது மனுவில், நான் பணி நியமனம்
செய்யும் போது ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறவில்லை. என்னால் தகுதி தேர்வு
எழுத முடியவில்லை. என் பணி நியமனத்தை அங்கீகரித்த மாவட்ட கல்வி அதிகாரி, 5
ஆண்டில் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என நிபந்தனை விதித்தார். அந்த
கெடு முடியவில்லை. அதை கருத்தில் கொள்ளாமலும் என்னை விசாரிக்காமலும்,
முன்கூட்டி நோட்டீஸ் அளிக்காமலும் என் பணி நியமனத்தை ரத்து செய்து மாவட்ட
கல்வி அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவரது உத்தரவை ரத்து செய்ய
வேண்டும். தடை விதிக்க வேண்டும்Õ என கூறியிருந்தார்.
மனுக்களை விசாரித்த நீதிபதி டி.ராஜா, பள்ளி
கல்வி இயக்குனரின் உத்தரவுக்கும், அந்த உத்தரவை தொடர்ந்து மனுதாரர்களுக்கு
மாவட்ட கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து
உத்தரவிட்டார். மனுவுக்கு பதிலளிக்க பள்ளி கல்வி செயலாளர், இயக்குனர்,
தஞ்சாவூர் மாவட்ட கல்வி அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி
உத்தரவிட்டார்.