அரசு துவக்கப் பள்ளிகளில், 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூட,
அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேநிலை நீடித்தால், அரசுப்பள்ளிகளே
இல்லாமல் போகும் என ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
தமிழக அரசு சமீப காலமாக, கல்வித்துறையில் நவீன பாட முறைகளையும், இலவச
திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது; இருந்தும், மாணவர் சேர்க்கை
குறைந்து வருகிறது. பெற்றோரின் ஆங்கிலக் கல்வி மோகம், போன்றவற்றின் தாக்கமே
இதற்கு காரணம். இதனால், அரசுப்பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது.
தற்போது உள்ள 23 ஆயிரத்து 576 துவக்கப்பள்ளிகளில், 1268 பள்ளிகளை மூட
அரசு முயற்சித்து வருவதாக ஆசிரியர் சங்கத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
முதல் கட்டமாக, 10 குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள பள்ளிகள் தேர்வு
செய்யப்பட்டு மூடப்பட உள்ளன. இப்பள்ளிகளில், தற்போது இரண்டு ஆசிரியர்கள்,
ஒரு சத்துணவு மேலாளர், இரண்டு ஆயாக்கள் உள்ளனர். இப்பள்ளிகளை மூடிவிட்டு,
அருகில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு
ஒன்றியத்திற்கு, மூன்று முதல் நான்கு பள்ளிகள் மூடப்படும். இதே நிலை
நீடித்தால், அரசுப்பள்ளிகள் இல்லாமல் போகும். இவ்வாறு கூறினர்.