தமிழகத்தில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டம்

தமிழகத்தில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ''இந்த விவகாரம் குறித்து, முதல்வர், உரிய முடிவை எடுப்பார்,'' என, பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா தெரிவித்தார்.


தமிழகத்தில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு அடுத்தபடியாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், அதிகளவில் இயங்கி வருகின்றன. இரு ஆண்டுகளுக்கு முன் வரை, 250 பள்ளிகள் வரை தான் இருந்தன. தற்போது, 300ஐ தாண்டி விட்டன. இரு ஆண்டுகளில், 100 பள்ளிகளுக்கு, தடையில்லா சான்றிதழ்களை, பள்ளி கல்வித் துறை வழங்கி உள்ளது.
தமிழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் தான், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், தமிழக அரசின் எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல், தனி ராஜ்ஜியமாக, இந்த பள்ளிகள் இயங்கி வருகின்றன. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை, கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கிறது. எனினும், அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், இந்த வரம்பிற்குள் வருவதில்லை.
மாணவர் சேர்க்கையிலும், எவ்வித வரன்முறையும் இல்லாமல், தாங்கள் நினைத்தபடி, எவ்வளவு மாணவர்களை வேண்டுமானாலும் சேர்க்கின்றனர். சமீபத்தில், 'சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, மாநில அரசுகளிடம், தடையில்லா சான்றிதழ் வாங்கத் தேவையில்லை' என, சி.பி.எஸ்.இ., போர்டு அறிவித்தது, சி.பி.எஸ்.இ., பள்ளி நடத்துவோரிடையே, மேலும், குஷியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, மாநில அரசின் கட்டுக்குள் கொண்டுவர, கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து, பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா கூறியதாவது:'மாநில அரசின் விதிமுறைகள், சட்ட திட்டங்கள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளையும் கட்டுப்படுத்தும்' என, சி.பி.எஸ்.இ., சட்டத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கல்வி கட்டணம், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவகாரங்களில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, ஒழுங்குபடுத்தும் வகையில், தமிழக அரசு, நடவடிக்கை எடுக்க, திட்டமிட்டுள்ளது.இந்த கருத்தை, முதல்வரின் கவனத்திற்கு, கொண்டு செல்ல உள்ளோம். அப்போது, முதல்வர், உரிய முடிவை எடுப்பார்.இவ்வாறு, சபிதா தெரிவித்தார்.

அரசின் முடிவு குறித்து, செயின்ட் ஜான்ஸ் குழும பள்ளிகளின், முதுநிலை முதல்வர், கிஷோர்குமார் கூறுகையில், ''தமிழக அரசின் முடிவை வரவேற்கிறோம். மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அதைத்தான், தமிழக அரசும் கூறுகிறது. எனவே, தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றுவதில், எங்களுக்கு, எந்த பிரச்னையும் இருக்கப் போவதில்லை,'' என, தெரிவித்தார்.

கல்வியாளர், ராஜகோபாலன் கூறியதாவது: கர்நாடகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளும், மாநில அரசின் கட்டுப்பாட்டில், பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. பேராசிரியர் யஷ்பால் குழு, 'சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான பாட திட்டங்களை மட்டும், சி.பி.எஸ்.இ., போர்டு வழங்கினால் போதும்; இதரபணிகளை, அந்தந்த மாநில அரசுகளே கவனிக்கலாம்' என, தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நியமிக்கப்பட்ட மத்திய குழுவும், 'சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் செயல்படலாம்' என, தெரிவித்துள்ளது. எனவே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, தமிழக அரசின் கட்டுக்குள் கொண்டு வருவதில், தவறு ஒன்றும் இல்லை.இவ்வாறு, ராஜகோபாலன் தெரிவித்தார்.

நடப்பு கல்வி ஆண்டு இறுதிக்குள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, தமிழக அரசின் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான விதிமுறைகள் வெளியிடப்படும் என்றும், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்றும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Popular Posts