பள்ளிக்கல்வித்துறைக்கு எதிராக, தினமும் வழக்குகள் நீதிமன்றத்தில்
அதிகரித்து வருகின்றன. மாநிலம் முழுவதும் 6,500 வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன. போதிய வழிகாட்டுதல், நிதியின்மையால் கல்வி அலுவலர்கள்,
சிக்கலில் தவிக்கின்றனர்.
பள்ளிக்கல்வித்துறைக்கு எதிராக,
துறை சார்ந்தவர்கள், துறை சாராதவர்கள் மற்றும் பொதுநல என்ற பிரிவுகளின்
வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், இடமாறுதல், ஊதிய
முரண்பாடு, ஓய்வூதியம், பணிநியமன முறைகேடு, முறையற்ற அரசாணை போன்ற
காரணங்களுக்காக பலர், நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
மாநிலம் முழுவதும்,
6500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்குகளை
கையாள்வதற்கு, போதிய நிதியின்மையால் பள்ளிகள் வளர்ச்சி, பராமரிப்பு,
விளையாட்டு போட்டிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை பயன்படுத்தும் அவலநிலை, பல
மாவட்டங்களில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
பள்ளிக்கல்வித்துறை நிர்வாக
அலுவலர்கள் சங்க மாநில தலைவர் பால்ராஜ்
கூறுகையில்,""பள்ளிக்கல்வித்துறையில் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால்,
நாளுக்குநாள் நீதிமன்ற வழக்குகள் அதிகரித்து வருகின்றன. நீதிமன்ற
செலவுக்காக, பள்ளிக்கல்வித்துறை எவ்வித நிதியும் ஒதுக்குவது கிடையாது.
நீதிமன்றங்கள் சார்ந்த போதிய அடிப்படை தெரியாத நிர்வாக ஊழியர்கள் பெரும்
அலைக்கழிப்பு, மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒழுங்கான வழிகாட்டுதல் இன்றி
திணறிவருகின்றோம்,'' என்றார். கல்வித்துறை தலைமை அதிகாரி ஒருவர்
கூறுகையில்,"பல்வேறு பணிச்சுமைகளுக்கு மத்தியில், நீதிமன்ற வழக்குகள்
என்பது பெரும் தலைவலியாக உள்ளது. நீதிமன்ற வழக்குகளை, கல்வித்துறை
அலுவலர்களை கொண்டு கையாள்கின்றோம். ஒருங்கிணைந்த மாவட்டங்கள் அளவில்,
வழக்குகளை எதிர்கொள்ள அலுவலர்களை நியமிக்கவேண்டும். போதிய தெளிவில்லாத
அரசாணைகளால் தான் வழக்குகள் அதிகரிக்கிறது' என்றார்.