ஓய்வுக்குப் பின் "சி.இ.ஓ.," பதவி: 400 தலைமையாசிரியர்கள் தவிப்பு

30 ஆண்டு கால போராட்டத்தால் ஓய்வுபெற்ற பின் கிடைத்த முதன்மைக் கல்வி அதிகாரி (சி.இ.ஓ.,) பதவிக்கு உரிய பணபலன்களை பெற முடியாமல், 75 வயதுக்கு மேல் ஆன் 400 "தலைமையாசிரியர்கள்" தவித்து வருகின்றனர். 

தமிழகத்தில் 1960 வரை கல்வி, சுகாதாரம், கால்நடை துறைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகமே (ஜில்லா போர்டு) கவனித்து வந்தது. 1960ல் அவை அந்தந்த துறைகளுடன் இணைக்கப்பட்டன. ஆனால் தொடக்கல்வி, பஞ்சாயத்து யூனியன்களின் நிர்வாகத்தின் கீழும், இடைநிலைக்கல்வி மாவட்ட கலெக்டர்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. 
அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உயர்நிலைப்பள்ளிகள், பயிற்சிப் பள்ளிகள் செயல்பட்டன. இங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் "ஏ" பிரிவினர் என்றழைக்கப்பட்டனர். கலெக்டர் கட்டுப்பாட்டில் இயங்கிய பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் "பி" பிரிவினர் எனப்பட்டனர். கடந்த 1.4.70ல் ஜில்லாபோர்டில் பணியாற்றிய ஆசிரியர்களும் அரசு ஊழியர்களாக ஏற்கப்பட்டனர். 
"ஏ" மற்றும் "பி" பிரிவு பணியாளர்களை ஒருங்கிணைத்து 2.11.1978 ல் அரசாணை வெளியிடப்பட்டது. இதில் எந்த தேதியை ஒருங்கிணைப்பு நாளாக முடிவு செய்வது என 1979 ல் பிரச்னை எழுந்தது. அப்போது இரு தரப்பினரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 1.4.70 தான் சரியான ஒருங்கிணைப்பு நாள் என 1979, 1988, 1998ல் சுப்ரீம்கோர்ட் 3 முறை உறுதி செய்தது. 
இதன் பின் 2004ல் ஒருங்கிணைந்த ஆசிரியர்கள் சீனியாரிட்டி லிஸ்டை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. ஆனால், 1979 முதல் 2004 வரை "ஏ" பிரிவு ஜூனியர்கள் டி.இ.ஓ., சி.இ.ஓ.,க்களாக பதவி உயர்வு பெற்று ஓய்வும் பெற்றனர். ஆனால் கலெக்டர் கட்டுப்பாட்டில் இருந்த, "பி" பிரிவு சீனியர்கள் தலைமையாசிரியர்களாக ஓய்வு பெற்றனர். 
திருத்தப்பட்ட சீனியாரிட்டி படி பதவி உயர்வுகளை அளிக்க வேண்டும் என "பி" பிரிவு ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 2004ல் வெளியிட்ட சீனியாரிட்டிப்படி பதவி உயர்வுகளை திருத்தியமைத்து பயன்களை வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது. 
இதன்படி பள்ளிக்கல்வித்துறை, திருத்திய டி.இ.ஓ.,க்கள் பட்டியலை 2006, 2010 லும், சி.இ.ஓ.,க்கள் பட்டியலை 2012 லும் வெளியிட்டது. இதன்படி 489 ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் பயன்பெற வேண்டும். இவர்களுக்கு தற்போது 75 வயதுக்கு மேல் ஆகி விட்டது. இதில் 45 பேருக்கு மட்டுமே பதவி உயர்வுக்கான சம்பளத்தை மறுநிர்ணயம் செய்து, அதற்கேற்ப பென்ஷன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இதில் அரசியல் செல்வாக்கு, பணபலம் உள்ளவர்களுக்கு மட்டுமே பலன் கிடைத்துள்ளது. மீதியுள்ளோர் தள்ளாத இந்த வயதிலும் சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்திற்கு அலைந்து வருகின்றனர். ஓய்வுக்கு பின் முதன்மை கல்வி அதிகாரி (சி.இ.ஓ.,) பதவி பெற்ற இந்த மூத்த குடிமக்கள் விரைவில் தங்களுக்கு உரிய பலன்களை பெற பள்ளிக்கல்வித்துறை மனது வைக்க வேண்டும்.

Popular Posts