தமிழ் வழியில் முதுகலை படித்திருந்தாலும் ஆசிரியர் பணி ஐகோர்ட் உத்தரவு

முதுகலை பட்டம் தமிழ் வழியிலும், இளங்கலை படிப்பை ஆங்கில வழியில் முடித்திருந்தாலும், மனுதாரரின் பிற தகுதிகள் திருப்தி அளிக்கும்பட்சத்தில், ஆசிரியர் பணிக்கு டி.ஆர்.பி., பரிசீலிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கமுதி நீராவியை சேர்ந்த மாரியம்மாள் தாக்கல் செய்த மனு: தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, எம்.காம்.,-பி.எட்., தேர்ச்சியடைந்தேன்.

 ஆங்கில வழியில் பி.காம்.,தேர்ச்சியடைந்தேன். முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்காக, 2012-13 ல் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்திய தேர்வில் பங்கேற்றேன். "கட்-ஆப்' மதிப்பெண் 92. எனக்கு 102 மதிப்பெண் கிடைத்தது. டி.ஆர்.பி., தரப்பில்,"நீங்கள் முதுகலை (எம்.காம்.,) தமிழ் வழியிலும், இளங்கலை (பி.காம்.,)ஆங்கில வழியிலும் படித்துள்ளதால், பணி நியமனம் வழங்க முடியாது,' என நிராகரித்தனர். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
 ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி எஸ்.நாகமுத்து முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் ஐசக்மோகன்லால் ஆஜரானார். நீதிபதி: தமிழ் வழியில் படித்தவர்களுக்கான சிறப்புச் சலுகையை, மனுதாரருக்கு வழங்க வேண்டும். முதுகலை பட்டம் தமிழ் வழியிலும், இளங்கலை படிப்பை ஆங்கில வழியில் முடித்திருந்தாலும், மனுதாரரின் பிற தகுதிகள் திருப்தி அளிக்கும்பட்சத்தில், அவரது பெயரை ஆசிரியர் பணிக்கு டி.ஆர்.பி., பரிசீலிக்க வேண்டும் என்றார்.

Popular Posts