மத்திய அரசின் திட்டப்படி மாதிரி பள்ளிகள் தமிழகத்தில் வருமா?

சென்னை : மத்திய அரசின் மாதிரிப் பள்ளிகள்  தமிழகத்தில் இல்லை; இந்த பிரச்னைக்கு மக்களவை தேர்தலுக்கு பின் தீர்வு ஏற்படும்  என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாதிரிப் பள்ளி திட்டத்தை செயல்படுத்தும் பணியை மத்திய அரசு 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் துவக்கியது. அப்போது கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திட்டத்திற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவியருக்கு பொது நுழைவுத் தேர்வு உண்டு என்பதும் இந்தப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி மட்டுமே கற்பிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது ஆங்கில வழிக் கல்வி குறித்து  பேசும் கருணாநிதி, அப்போது ஏன் இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளித்தார் என்பதை தெரிவிக்க வேண்டும்.
 மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ், பொது , தனியார் பங்களிப்புடன் இந்தியாவில் முதல் கட்டமாக,  41 மாதிரிப் பள்ளிகள் துவங்கப்பட உள்ளன.

 இதில் ஒன்று கூட தமிழ் நாட்டில் இல்லை. 500 ஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகள் துவங்குவதற்கான ஒப்பந்தத்தினை மத்திய அரசு கோரியுள்ளது. இருப்பினும், இது வரையில் தமிழ்நாட்டிலிருந்து இந்த ஒப்பந்தத்தில் யாரும் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிய வருகிறது.

இந்த மாதிரி பள்ளி களை அடுத்த கல்வி ஆண்டுக்கு முன்னர் தொடங்க முடியாது;  அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் முடிவிற்குப் பிறகு ஆட்சி மாறும், தமிழக மக்களுக்கு ஏற்றம் தரக்கூடிய மாற்றம் வரும், அதன் மூலம் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

எக்ஸ்ட்ரா தகவல்

மொத்தம் 6,000 மாதிரி பள்ளிகள் துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், 3,500 மாதிரி பள்ளிகள் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் மாநில அரசுகள் மூலம் துவக்கப்படும். எஞ்சியவை ஏனைய வட்டாரங்களில் பொது ,தனியார் பங்கீட்டு டன் அமைக்கப்பட உள்ளது.

Popular Posts