ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதில் ஆர்வம் குறைவு: மூடுவிழாவை நோக்கி கல்லூரிகள்

ஆசிரியர் பயிற்சியில் சேரும் ஆர்வம் மாணவர்களிடம் குறைந்துள்ளதால் பல ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடு விழாவை நோக்கி பயணிக்கத் துவங்கி உள்ளன.

புதுச்சேரி மாநிலத்தில் பி.எட்., கல்லூரிகள் -28 , பட்டய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் - 51, செயல்பட்டு வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் ஏறக்குறைய 5000 இடங்கள் உள்ளன. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் பி.எட்., கல்லூரிகளில் சேர மாணவ மாணவிகளிடையே ஆர்வமும் போட்டியும் இருந்தது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள்கூட மருத்துவம், இன்ஜினியரிங் படிப்பைத் தவிர்த்து ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் காட்டினர். மொத்தமுள்ள இடங்களை விட இரு மடங்கிற்கும் அதிகமாக மாணவர்கள் விண்ணப்பிக்கும் நிலை இருந்தது.
இந்த நிலை மெல்ல மெல்ல மாறி, தற்போது ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்தாண்டு, ஆசிரியர் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தலைகீழாக மாறியுள்ளது.
விண்ணப்பித்த அனைவருக்கும் சீட் உறுதி என்ற போதிலும் கூட பல கல்லூரிகளில் முழுவதுமாக பி.எட்., டி.டி.எட்., இடங்கள் நிரம்பவில்லை. இந்தாண்டில் மாணவர்களை சேர்க்க, தனியார் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் படாத பாடுபட்டன.
மூடுவிழாவை நோக்கி...
லாஸ்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி இருக்கும். இந்தப் பள்ளியில் 100 இடங்கள் இருந்தபோதிலும், இந்தாண்டு 60 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
சில ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கு கீழேதான் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. வரும் ஆண்டுகளில் 25 சதவீத இடங்களாவது நிரம்புமா என்ற கேள்விகுறி ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் மவுசு குறைந்துவிட்டதால், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மெல்ல மெல்ல மூடு விழாவை நோக்கி பயணிக்கத் துவங்கியுள்ளன.
காரணம் என்ன?
ஆசிரியர் பட்டயப் பயிற்சி படிப்பவர்கள் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றலாம். ஆனால், புதுச்சேரியில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. தேர்ச்சி பெற்றாலும் மாநில அளவில் வேலைவாய்ப்பு அலுவலக பணி மூப்பு அடிப்படையில் தான் வேலை கிடைக்கும். இது போன்ற சிக்கல் காரணமாக ஆசிரியர் படிப்பை மாணவர்கள் இந்தாண்டு ஒதுக்கியுள்ளனர். புற்றீசல்கள் போல் அதிகரித்துவிட்ட கல்வியியல் நிறுவனங்களும் மாணவர் சேர்க்கை வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமாக அமைந்துவிட்டன.
ஆர்வம் இல்லை
ஏற்கெனவே இயங்கி வரும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களே போணியாகாத நிலை உள்ளதால், புதிதாக ஆசிரியர் பயிற்சி பள்ளி துவங்கும் எண்ணத்தில் இருந்தவர்கள் உஷாராகி விட்டனர். கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சிப் பள்ளி துவங்க அனுமதி கேட்டு ஒரு விண்ணப்பமும் வரவில்லை. ஒரே ஒரு கல்வியியல் கல்லூரி மட்டுமே இந்தாண்டு சீட் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளது. அடுத்த கல்வியாண்டில் புதிய பள்ளிகளை துவங்க என்.சி.டி.இ.யிடம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் யாரும் ஆர்வம் காட்டவில்லை.

Popular Posts