பொருளாதாரத்தில் நலிந்த மற்றும் புத்திசாலி மாணவர்களுக்கு, தொலைநிலைக் கல்வி முறையில் ஏதேனும் உதவித்தொகை திட்டங்கள் உள்ளனவா?
பொதுவாக, ஏதேனும் பணியில்
இருக்கும் அல்லது வருமானம் ஈட்டும் நிலையில் இருப்பவர்கள்தான், தொலைநிலைக்
கல்வியில் சேர்கிறார்கள். எனவே, உதவித்தொகைக்கான தேவை பெரும்பாலும்
அவர்களுக்கு எழுவதில்லை. இதனாலேயே, தொலைநிலை மாணவர்களுக்கென்று,
சொல்லிக்கொள்ளும் அளவில் உதவித்தொகை திட்டங்கள் எதுவும்
செயல்படுத்தப்படுவதில்லை.
அதேசமயம், சிக்கிம் மணிப்பால் பல்கலை போன்ற கல்வி நிறுவனங்களில்
தொலைநிலைக் கல்வி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, HDFC வங்கியின் மூலம்
கல்விக் கடன் வழங்கப்படுகிறது. அப்பல்கலையில் தொலைநிலையில்
மேற்கொள்ளப்படும் அனைத்து படிப்புகளுக்கும் அது செல்லும்.
குறைந்தபட்சம் ரூ.50,000 என்ற அளவிலிருந்து அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம்
வரையில் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. அதேசமயம், கல்விக்கடன் பெற
Co-applicant/Co-borrower போன்ற அம்சங்கள் கட்டாயம் தேவை. மேலும், சிக்கிம்
மணிப்பால் பல்கலையின் சார்பில், வித்யதீப் என்ற திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.
இது தேசியளவிலான ஒரு உதவித்தொகை திட்டமாகும். இதன்படி, மெரிட்
அடிப்படையில், இப்பல்கலையின் தொலைநிலைக் கல்வியில் சேரும் மாணவர்களில்
மொத்தம் 1,500 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த 1,500 என்ற மொத்த
எண்ணிக்கையில் 500 உதவித்தொகைகள், வடகிழக்கு மாணவர்களுக்காக
ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், பல பல்கலைகளில், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும்
பத்திரிகைத் துறையில் பணியாற்றுபவர்கள் ஆகிய சிலவகை பிரிவுகளில் வரும்
மாணவர்களுக்கென்று, கல்விக் கட்டணத்திலிருந்து 10% வரை தள்ளுபடி
அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பவர்களுக்கு, வருகைப் பதிவு என்பது மிகவும் அவசியமா?
தொழில்முறை படிப்புகளைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் 50% வருகைப்பதிவு
இருக்க வேண்டும். அதேசமயம் Non - professional படிப்புகளுக்கு அந்தளவு
வருகைப் பதிவு தேவையில்லை மற்றும் சில பல்கலைகளில் கலை படிப்புகளுக்கு
எந்தவிதமான வருகைப்பதிவும் தேவையில்லை.
வருகைப் பதிவு என்பதைத் தாண்டி, ஒருவருக்கு PCP வகுப்புகளுக்கு சென்று,
அதன்மூலம் தேவையான வழிகாட்டுதல்களைப் பெற வேண்டும் என்ற தேவையேற்பட்டால்
கலந்துகொள்ளலாம். எனவே, வருகைப்பதிவோடு அதை சேர்த்து குழப்பிக்கொள்ள
வேண்டியதில்லை.
பல பல்கலைகள், தங்களிடம் முழுநேர படிப்பை மேற்கொள்ளும்
மாணவர்களுக்கு வளாக வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. ஆனால் இதே
வசதியை தங்களிடம் தொலைநிலைக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கும் அவை செய்து
தருகின்றனவா?
இது அந்தந்த பல்கலையைப் பொறுத்த விஷயம். அந்தந்த பல்கலைகள், தங்களின்
தொலைநிலைக் கல்வி மாணவர்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது
என்பதைப் பொறுத்த விஷயம். ஆனால், இங்கே இந்த விஷயத்தை நாம் நடைமுறை ரீதியாக
அணுக வேண்டியுள்ளது.
பொதுவாக, தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பவர்களில் மிகப்
பெரும்பான்மையோர் ஏற்கனவே பணிபுரியும் நபர்களாகவே இருக்கிறார்கள். எனவே,
அவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு என்பது தேவையாக இருப்பதில்லை. தொலைநிலைக்
கல்வியில் பட்டம் பெறுவதென்பது, ஏற்கனவே பணிபுரிந்து கொண்டிருக்கும்
நபர்களுக்கு ஒரு கூடுதல் தகுதியாக அமைகிறது. நிலைமை இப்படி இருந்தாலும்கூட,
சில பல்கலைகள், தங்களிடம் தொலைநிலையில் படிக்கும் மாணவர்களுக்கு,
வேலைவாய்ப்பை பெறுவதைப் பற்றிய வழிகாட்டுதல்களை வழங்குகின்றன.