30% ஆரம்பப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறி

மதுரை மாவட்டத்தில், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் 30 சதவிகிதம் அரசு ஆரம்பப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. 

தொடக்கக் கல்வித் துறை வாய்மொழி உத்தரவுப்படி, மாவட்டந்தோறும் மாணவர்கள் எண்ணிக்கை 20க்கும் கீழ் உள்ள பள்ளிகள், அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை விவரங்கள் குறித்த கணக்கெடுக்கும் பணிகள் நடக்கின்றன.மதுரை மாவட்டத்தில் இப்பணிகள் முடியும் நிலையில் உள்ளன.
இத்துறையின் கீழ், 963 ஆரம்பப் பள்ளிகள், 312 நடுநிலைப் பள்ளிகளில் 1.51 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். தற்போதைய ஆய்வில், ஒவ்வொரு கல்வி ஒன்றியத்திலும் (மொத்தம் 15 கல்வி ஒன்றியங்கள் உள்ளன), சராசரியாக 30 சதவிகிதம் பள்ளிகளில், மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 20க்கும் கீழ் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வரும் காலங்களில், இப்பள்ளி மாணவர்களை அருகாமையில் இயங்கும் மற்றொரு அரசு பள்ளியுடன் இணைக்கும் திட்டத்தின் அடிப்படையில் தான் இந்த ஆய்வு நடத்தப்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க பல நடவடிக்கையை அரசு எடுத்து வரும் நிலையில், எண்ணிக்கையை காரணம் காட்டி, பள்ளிகள் மூடப்படும் நிலை குறித்து கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாவட்ட செயலாளர் முருகன்: கிராமப் பகுதி பள்ளிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் மக்கள் எதிர்பார்ப்பு. எண்ணிக்கையை காரணமாக வைத்து, பள்ளிகளை மூடுவதற்கான திட்டம் இருந்தால், அதை அரசு கைவிட வேண்டும். மதுரையில் நடந்த ஆய்வில், 30 சதவிகிதம் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக கூறுகின்றனர்.
குறிப்பாக, உசிலம்பட்டி கல்வி ஒன்றியத்தில், 20 மாணவர்களுக்கு கீழ் பல்வேறு பள்ளிகளில், தலைமையாசிரியர் தவிர, பிற ஆசிரியர்களை அருகாமையில் இயங்கும் பள்ளிகளுக்கு அயல் பணிக்காக அனுப்பி வைத்து கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதை தவிர்த்து, கிராமங்களில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார்.

Popular Posts