பள்ளிகளில் புகார்களுக்கு இடம் கொடுக்காதீர்:கல்வித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை


பள்ளிகளில் புகார்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார்.
 மதுரை டிவிஎஸ் மெட்ரிக். பள்ளியில் மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களின் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:

 எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, நடப்பு ஆண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக அளவாக ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் எவ்வித சிரமமும் அடையக் கூடாது என்பதற்காக பாடப்புத்தகங்களில் இருந்து அனைத்தையும் முதல்வர் ஜெயலலிதா இலவசமாக வழங்கி வருகிறார். வேறெந்த துறைக்கும் இல்லாத சிறப்பு, சமூகத்தை நல்வழிப்படுத்தக் கூடியதாக பள்ளிக் கல்வித் துறை செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, அதன் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் முதல்வர் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.


 இத்தகைய துறையில் பணியாற்றக் கூடிய ஒவ்வொருவரும் அதே ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயலாற்ற வேண்டும். அரசின் திட்டங்கள் மாணவர்களை முழுமையாகச் சென்றடைவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகள் அனைத்தும் நூறு சதவீத தேர்ச்சி என்ற இலக்கை அடைய ஆசிரியர்கள், அலுவலர்கள் உறுதியேற்க வேண்டும்.
 சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் ஏராளமாக வருகின்றன. இனிவரும் காலங்களில் பள்ளிகளில் எவ்விதப் புகாருக்கும் இடம் கொடுக்கக் கூடாது.
 ஆசிரியர்களின் வருகையை, அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். கல்வித் துறை அலுவலர் ஆசிரியர்களை நல்ல முறையில் நடத்துவது அவசியம் என்றார்.
 பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் த.சபீதா, மதுரை மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, பள்ளிக் கல்வி இயக்குநர் கு.தேவராஜன், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சு.நாகராஜமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

 தொடக்கக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்றார். பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அ.கருப்பசாமி நன்றி கூறினார்.

 ஆய்வுக் கூட்டத்தில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் சிறந்த பள்ளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் கேடயங்களை வழங்கினார்.

 மாணவர் சேர்க்கை, கல்வித் தரத்தை மேம்படுத்துவது, ஆங்கில வழிப் பிரிவு துவக்கம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்துவது, மாணவர்கள்-ஆசிரியர் தகவல் தொகுப்பு, அலுவல் நடைமுறைகள் உள்ளிட்ட அறிவுரைகளை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு முதன்மைச் செயலர் சபீதா வழங்கினார்.

Popular Posts