இணையதளத்தில் வெளியிட பள்ளிகளின் புள்ளிவிவரம் சேகரிப்பு


தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள, உள் கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணியை, வரும் நவம்பர் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், அரசு பள்ளிகளில் உள்ள உண்மையான நிலவரம் தெரிந்து விடும்.

தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, மொத்தம், 55 ஆயிரத்து 667 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 5.49 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 1.35 கோடி மாணவ, மாணவியர், படித்து வருகின்றனர். அனைத்துப் பள்ளிகள், அவற்றின் உள் கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை திரட்டி, அவை, பள்ளிக் கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. 

இந்த விவரங்களின் அடிப்படையில், தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், புதிய திட்டங்களை தீட்டவும், பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியை, ஆண்டுதோறும் நடத்த, திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து வகை பள்ளிகளுக்கும், 32 பக்கங்கள் அடங்கிய படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. 

ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்ககத்தின் சார்பிலும், இதர வகுப்புகளுக்கு, மத்திய இடைநிலை கல்வித்திட்டம் சார்பிலும், விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப படிவத்தில், தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்தால், அதற்கு, சம்பந்தபட்ட தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் எனவும், அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

மேலும், இனசுழற்சி என்ற அடிப்படையில், பல்வேறு இன மாணவர்கள் பங்கேற்கும் நடைமுறை விவரம், ஒப்பந்த ஆசிரியர் எண்ணிக்கை, அவர்களைப் பற்றிய விவரங்கள், பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகள் உட்பட, பல்வேறு தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.

Popular Posts