ஒவ்வொரு வகுப்பிலும் புகார் பெட்டி: தேசிய ஆணையம் உத்தரவு


 "அனைத்து வகை பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்பிலும், புகார் பெட்டி அமைக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர், சாந்தா சின்கா உத்தரவிட்டார்.
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிகழ்ந்த குழந்தை உரிமை மீறல்கள் குறித்த, இரண்டு நாள் பொது விசாரணை, சென்னையில் நேற்று துவங்கியது. இதற்காக, குழந்தை உரிமை மீறல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர், விசாரணை செய்த போலீசார், கல்வித்துறை அதி காரிகள் உள்ளிட்ட பலதுறையைச் சேர்ந்த அதிகாரிகள், பொது விசாரணையில் ஆஜராக வேண்டும் என, தேசிய கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள், விசாரணைக்கு வந்தனர்.

62 உரிமை மீறல்கள்: இரு மாநிலங்களிலும் நிகழ்ந்த, 62 உரிமை மீறல்கள் குறித்த சம்பவங்கள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், கல்வி உரிமை மறுத்தல், குழந்தை தொழிலாளர், உடல் ரீதியான தண்டனை அளித்தது, குழந்தை கடத்தல், பாலியல் கொடுமைகள் என, பல்வேறு உரிமை மீறல் சம்பவங்கள் இடம் பெற்றிருந்தன. 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, செத்தவரை கிராமத்தைச் சேர்ந்த, 13 வயது சிறுமி, கடந்த ஏப்ரல் மாதம், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து, விசாரணை நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி, பேச முடியாமல் அழுததைக் கண்டு, பார்வையாளர்கள் கடும் வேதனை அடைந்தனர்.

மிரட்டல் புகார்: "போலீசார் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை; உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை&' என, சிறுமியின் தாய் குற்றம் சாட்டினார்; மேலும், தங்களுக்கு, தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் தெரிவித்தார். 

இதற்கு டி.எஸ்.பி., அளித்த பதில் திருப்தி அளிக்காததால், ""பாதிக்கப்பட்ட சிறுமிக்கென தனியாக வக்கீலை நியமித்து, அவருக்கு உரிய நீதி கிடைக்க, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சாந்தா சின்கா உத்தரவிட்டார்.

மேலும், "சிறுமி விரும்பும் பள்ளியில், கல்வியைத் தொடர, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, அவர் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா பேசுகையில், "சிறுமி, எந்தப் பள்ளியில் சேர விரும்பினாலும், அந்தப் பள்ளியில் சேர்ப்பதற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

புகார் பெட்டி : இரண்டாவதாக, சென்னை, வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த, 11 வயது சிறுமி, அருகில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் (அரசு உதவிபெறும் பள்ளி) படித்து, பள்ளி ஆசிரியையின் கொடுமைக்கு ஆளாகி, ஜூனில், "கெரசின் ஊற்றி தீ வைத்து, தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடுகளை, சாந்தா சின்காவும், முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவியும், கடுமையாக கண்டித்தனர். மாணவியரை ஆசிரியை கொடுமைப்படுத்தியது குறித்து, தங்களுக்கு எதுவும் தெரியாது என, பள்ளி தாளாளர் தெரிவித்தார். 

இதற்கு, "பள்ளியில் நடப்பது எதுவுமே தெரியாமல், எப்படி ஒரு நிர்வாகம் இருக்க முடியும்? மாணவியரிடம், குறைகளை கேட்டறியும் வழக்கத்தை கடைபிடித்தீர்களா?" என, பல்வேறு கேள்விகளை, வசந்திதேவி கேட்டார்.
இதையடுத்து, ஆணைய தலைவர் சாந்தா சின்கா கூறியதாவது: சம்பந்தபட்ட பள்ளி மட்டுமில்லாமல், அனைத்து வகை பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்பிலும், புகார் பெட்டி அமைப்பதற்கு, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ, மாணவியரிடம், முறையாக குறைகளை கேட்டறிந்து, அதை நிவர்த்தி செய்ய, பள்ளி நிர்வாகங்களும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சாந்தா சின்கா தெரிவித்தார்.

Popular Posts