"தனியார் பள்ளிகளுக்கு, ஆண்டுக்கு, 9 சதவீதம் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயித்துள்ளோம்" என, கட்டண நிர்ணய குழுத் தலைவர், சிங்காரவேலு கூறினார். அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான, கூடுதல் கட்டணங்களை திருப்பித் தந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னையில், @நற்று அவர் கூறியதாவது: இதுவரை, 1,000 பள்ளிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயித்துள்ளோம். புதிய கட்டணம் நிர்ணயிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், 400 பள்ளிகள் வழக்கு தொடர்ந்தன. இந்தப் பள்ளிகளுக்கு, டிசம்பருக்குள், புதிய கட்டணம் நிர்ணயிக்க, ஐகோர்ட் உத்தரவிட்டது.
முதல் கட்டமாக, 200 பள்ளிகளிடம் விசாரணை நடத்தி, புதிய கட்டணத்தை நிர்ணயித்து விட்டோம். இம்மாத இறுதிக்குள், கட்டண விவரம், அரசு இணையதளத்தில் வெளியிடப்படும். மீதமுள்ள, 200 பள்ளிகளிடம், விசாரணை நடந்து வருகிறது.
நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பரிலோ, அந்தப் பள்ளிகளுக்கான கட்டண விவரம் வெளியிடப்படும். அனைத்துப் பள்ளிகளுக்கும், மூன்று ஆண்டுகளுக்கான கல்வி கட்டணங்களை, தனித்தனியே அட்டவணையிட்டு வழங்குகிறோம்.
விலைவாசி உயர்வு, சம்பளம் அதிகரிப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, ஆண்டுக்கு, 9 சதவீதம் வீதம், கட்டணத்தை உயர்த்தி நிர்ணயித்துள்ளோம். "ஸ்மார்ட் வகுப்புகள்&' நடத்துவதாக கூறி, பல பள்ளிகள் தனியாக கட்டணம் வசூலித்து வந்தன.
தற்போது, அந்த வகுப்புகளுக்கும் சேர்த்தே, கட்டணம் நிர்ணயிக்கிறோம். எனவே, இனி, அதற்கென தனி கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான, கூடுதல் கட்டணங்களை திருப்பித் தந்துள்ளன.
கூடுதல் கட்டணங்களை திருப்பி வழங்கியதற்கான ஆவணங்களை காட்டாவிட்டால், மெட்ரிக் இயக்குனரக அதிகாரிகளிடம் கேட்டு, உறுதி செய்து கொள்கிறோம். இவ்வாறு சிங்காரவேலு கூறினார்.