எஸ்.எஸ்.ஏ., தொகுப்பூதிய ஊழியர் கோரிக்கை நிராகரிப்பு


அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தில், பணியாற்றி வரும், 5,000 தொகுப்பூதிய ஊழியர்களின், பணி வரன்முறை கோரிக்கையை நிறைவேற்ற முடியாது' என, இயக்ககம் கைவிரித்து விட்டது.நாடு முழுவதும், 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும் கல்வி அளிக்கும் நோக்கில் எஸ்.எஸ்.ஏ., திட்டம், 2002ல் துவக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும், மாவட்ட, ஒன்றிய அளவில், 5,000 பேர், கட்டட பொறியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், கம்ப்யூட்டர் புரோகிராமர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில், பணி புரிகின்றனர்.

இவர்களுக்கு, 6,000 முதல், 13 ஆயிரம் ரூபாய் வரை, சம்பளம் வழங்கப் படுகிறது. 10 ஆண்டுகளாக தொகுப்பூதிய நிலையில் பணிபுரிந்து வரும் இவர்கள், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, தமிழக அரசை, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பணி வரன்முறை குறித்த அறிவிப்பை, ஒவ்வொரு ஆண்டும், பட்ஜெட் மற்றும் சட்டசபை கூட்டத்தொடரில், ஊழியர் எதிர்பார்க்கின்றனர்; ஆனால், ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இதுகுறித்து, எஸ்.எஸ்.ஏ., இயக்கக வட்டாரம் கூறுகையில், ""ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, தொகுப்பூதிய அடிப்படையில், ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். எனவே, அவர்களை, பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை. எனினும், மத்திய அரசின் வேறு திட்டங்கள் தொடர்ந்து வரும் என்பதால், அவர்களுடைய வேலைவாய்ப்பு பாதிக்காது,'' என, தெரிவித்தன.

Popular Posts