அரசு ஊழியர் சங்கம் எந்த கட்சிக்கு ஆதரவு

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, காலிப்பணியிடத்தை நிரப்பி, சம்பள வரையறை உள்ளிட்ட, நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற, தேர்தல் வாக்குறுதி வழங்குபவர்களுக்கு, 13 லட்சம் அரசு ஊழியர்கள் ஆதரவு அளிப்பர்,'' என, அரசு ஊழியர் சங்க மாநில செயலர், தமிழ்செல்வி தெரிவித்தார்.

ஈரோட்டில், தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நடந்த, மகளிர் கருத்தரங்கில் பங்கேற்ற, தமிழ்செல்வி, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என, 13 லட்சம் பேர் உள்ளனர். அனைத்து மாநிலங்களும், ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைபடி, அதிகரிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இன்று வரை கிடைக்கவில்லை.

கடந்த சட்டசபை தேர்தலின்போது, தொகுப்பு, மதிப்பு ஊதியமுறை ரத்து, புதிய பென்ஷன் திட்டம் திருத்தம், ஊதியக்குழு முரண்பாடு களைதல், ஊழியர் சங்கங்களை, மூன்று மாதத்துக்கு ஒருமுறை சந்தித்து பேசுதல் என, பல வாக்குறுதிகளை அளித்த, தமிழக முதல்வர், ஜெயலலிதாவை, மூன்றாண்டுகளாக சந்திக்க முடியவில்லை.

சென்னையில், முதல்வரை சந்திக்க, ஒரு லட்சம் பேரை திரட்டி, பேரணி நடத்தியபோதிலும், சந்திக்க முடியவில்லை. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு, சிறப்பு கால முறை ஊதியம் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கையை நிறைவேற்ற, வாக்குறுதி அளிப்பவருக்கு மட்டுமே, லோக்சபா தேர்தலில், அரசு ஊழியர் சங்கம் ஆதரவு அளிக்கும். இவ்வாறு, அவர் கூறினார். தமிழகத்தில், அடுத்த மாதம், 24ல், லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.

Popular Posts