அரசு ஊழியர் மருத்துவ நல நிதி திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்டமருத்துவமனையில், மனுதாரர் சிகிச்சை பெறவில்லை எனக்கூறி, தொகையை அனுமதிக்கமறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருதய ஆப்பரேஷனுக்கான தொகையை திரும்ப வழங்க வேண்டும்,'
என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை விளாங்குடி சிதம்பரம் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் வேளாண்விற்பனைக்குழு அலுவலகத்தில், ஊழியராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றேன். இருதய ஆப்பரேஷனுக்கு 1 லட்சத்து 94 ஆயிரத்து 982 ரூபாய் செலவானது. தமிழ்நாடு அரசு ஊழியர் மருத்துவ நலநிதி திட்டத்தின் கீழ், தொகையை திரும்ப வழங்குமாறு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண்வணிகத்துறை இயக்குனர், திண்டுக்கல் விற்பனைக்குழு செயலாளருக்கு விண்ணப்பித்தேன்; நிராகரித்தனர்.தொகையை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உத்தரவு:
அரசு ஊழியர் மருத்துவ நல நிதி திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில், மனுதாரர்சிகிச்சை பெறவில்லை எனக்கூறி, தொகையை அனுமதிக்க மறுத்துள்ளனர். ஒரு மனிதன் உயிருக்கு போராடும் நிலையில், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை எது? அங்கீகரிக்கப்படாத மருத்துவமனை எது? என ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது.செலவு செய்த தொகையை, திரும்பப் பெற முடியுமா? இல்லையா? என சிந்திக்கவும் முடியாது.உடல்நிலை மோசமடைந்தால், பாதிக்கப்பட்டவருக்கு உடனடி சிகிச்சை தேவை. இத்திட்டத்தின் நோக்கமே,இதுபோல் திடீர் மருத்துவச்செலவு ஏற்பட்டால், அதை சமாளிக்கத்தான். செலவு தொகையை, திரும்பவழங்குவதுதான். மனுதாரருக்கு, மறுப்பதன் மூலம், திட்டத்தின் நோக்கம் நிறைவேறாது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில், சிகிச்சை பெறவில்லை என்பது போன்ற தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி, தொகை வழங்க மறுப்பதை ஏற்க முடியாது. தொகையை வழங்க மறுத்த உத்தரவை, ரத்து செய்கிறேன்.
மருத்துவ செலவு தொகையை மனுதாரருக்கு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர்வழங்க வேண்டும், என்றார்.