''சம்பள பிடித்தம் அறிவிப்பு, தேர்தல் தேதி அறிவிப்பு ஆகியவற்றுக்குப் பிறகும், 60 ஆயிரம் ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றது, பெரிய வெற்றி,''

ஆறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள், நேற்று நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, தமிழக அரசுக்கு, 6 கோடி ரூபாய் வரை, மிச்சம் ஏற்பட்டுள்ளது. ''சம்பள பிடித்தம், தேர்தல் தேதி அறிவிப்பு ஆகியவற்றுக்குப் பிறகும், 60 ஆயிரம் ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றது, பெரிய வெற்றி,'' என, அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், தென்னிந்திய செயலர், அண்ணாமலை தெரிவித்தார்.


மத்திய இடைநிலை ஆசிரியருக்கு இணையாக, தமிழக இடைநிலை ஆசிரியருக்கு சம்பளம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்க கல்வித்துறை சார்ந்த, ஆறு ஆசிரியர் சங்கங்கள், நேற்று ஒருநாள், வேலை நிறுத்த போராட்டம் நடத்தின. இதை முறியடிக்க, தொடக்க கல்வித்துறை, பல நடவடிக்கைகளை எடுத்தது.

சம்பளம் 'கட்':

எனினும், மாநிலம் முழுவதும், 60 ஆயிரம் ஆசிரியர், வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதாக, அண்ணாமலை தெரிவித்தார். அவர் கூறியதாவது: ஒரு பக்கம், வேலை நிறுத்தம் செய்தால், சம்பளம், 'கட்' எனவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், துறை இயக்குனர், மிரட்டியபடி இருந்தார். மற்றொரு பக்கம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையும் தாண்டி, 60 ஆயிரம் ஆசிரியர், வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டது, மிகப் பெரிய வெற்றி. ஒவ்வொரு மாவட்டத்திலும், சராசரியாக, 2,000 ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றனர். 


 ஆனாலும், துறை அதிகாரிகள், அரசுக்கு, குறைவான எண்ணிக்கையை காட்டி, அறிக்கை அனுப்புவர். அவர்களுக்கு, வேறு வழி இல்லை. தேர்தலுக்குப் பின், முதல்வர், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து, பேச்சு நடத்தி, பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு எடுக்க வேண்டும். இல்லை எனில், ஆறு ஆசிரியர் சங்கங்கள் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களையும் சேர்த்து, போராட்டம் நடத்துவோம். இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.

Popular Posts