அனைத்து அரசு பணியாளர்களும், கட்டாயம் போட்டோவுடன் அடையாள அட்டை அணிய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா

"அனைத்து அரசு பணியாளர்களும், கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.  
தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களை, பள்ளிக்கல்வித்துறை சார்பில், 64 கல்வி மாவட்டங்களாக பிரித்துள்ளனர். தமிழகத்தில், அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என மொத்தம், 36,813 பள்ளிகளும், 8,395 நிதியுதவி பள்ளிகளும், 11,365 சுயநிதி பள்ளி என மொத்தம், 56,573 பள்ளி உள்ளன. இந்த பள்ளிகளில், கல்வி பயிலும், 1.35 கோடி மாணவர்களுக்கு, 56,000 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் வரும், அனைத்து துறையினருக்கும், அரசு முதன்மை செயலர் சபிதா அவசர சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் கீழ், அனைத்து அரசு பணியாளர்களும், அலுவலகத்தில் பணியாற்றும் நேரங்களில், தவறாமல் அவர்களது போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை அணிதல் வேண்டும், என ஆணையிட்டுள்ளார். முன்பு இருந்த அடையாள அட்டையில், அரசு பணியாளர்களது பெயர் மற்றும் பதவி ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. 
 
அந்த முறையை நவீனப்படுத்தும் விதமாக, அடையாள அட்டையில், பணியாளர்களின் பெயர் மற்றும் பதவியை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒன்றின் கீழ் ஒன்று இடம் பெறுமாறு மாற்றி அமைத்து, அடையாள அட்டை வழங்க, அனைத்து துறை தலைவர்களுக்கும், கலெக்டருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Popular Posts