Part Time Teachers Priority | பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம் நடக்கும் போது பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்


பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம் நடக்கும் போது பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சேலத்தில் நடந்த விழாவில் செம்மலை எம்.பி., பேசினார்.

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கம் சார்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு சேலத்தில் நேற்று நடந்தது. சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் ராமர் தலைமை வகித்தார். பொருளாளர் முருகேசன், ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பெரியசாமி வரவேற்றார்.

அதிமுக அமைப்பு செயலாளரும் எம்.பி.யுமான செம்மலை சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியது: தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட போது இத்திட்டம் 2014ம் ஆண்டுடன் முடிந்து விடும். அதன்பின், பகுதி நேர ஆசிரியர்களுக்கு வேலை இருக்காது என எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர்.

ஆனால் மத்திய அரசு, எஸ்.எஸ்.ஏ. திட்டத்தை 2017ம் ஆண்டு வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் பகுதி நேர ஆசிரியர்கள் யாரும் கவலைப்பட வேண்டும். அப்படியே, எஸ்.எஸ்.ஏ. திட்டம் நின்று போனாலும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உங்களை தத்தெடுத்துக் கொள்ளும். பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படும் போது, பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதல்வர் ஜெயலலிதா உங்களுக்கு அரணாக இருப்பார்.

அதே நேரம், நீங்களும் உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். தகுதித்தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் என்பவரும் மாணவர்கள்தான். அதனால், ஆசிரியர் பணியில் சேர்ந்துவிட்டோம் என்பதற்காக படிப்பதை நிறுத்தி விடக்கூடாது. தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். மாணவர்கள் உங்களை பார்த்து கற்றுக் கொள்ளும் வகையில் நீங்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 16549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமித்து முதல்வர் உத்தரவிட்டார். இதில், சேலத்துக்கு 763 பணியிடங்கள் கிடைத்தது. சமீபத்தில் 1800 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், சேலத்துக்கு 77 பணியிடங்கள் கிடைத்தது. இந்த அரசு, ஆசிரியர்களுக்கு பக்கபலமாக இருக்கும். இவ்வாறு செம்மலை எம்.பி., பேசினார்.

சேலம் மாநகராட்சி மேயர் சவுண்டப்பன், துணை மேயர் நடேசன், ஆத்தூர் எம்எல்ஏ மாதேஸ்வரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சங்க நிர்வாகிகள் சுந்தர், கணேஷ், அருள், வேல்முருகன், இளவரசன், செல்வக்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Popular Posts