பள்ளி துவங்குவதற்குள் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : பள்ளி கல்வி துறை திட்டம்


ஜூன் மாதம், பள்ளிகள் திறந்தபின், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தினால், ஆசிரியர்கள், பாடம் நடத்துவதில் கவனம் செலுத்தாமல், விரும்பும் இடங்களுக்கு, மாறுதல் வாங்குவதிலேயே, கவனம் செலுத்துகின்றனர். இதனால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு, கோடை விடுமுறையான, மே மாதத்திலேயே, பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்தி முடிக்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 


கடந்த சில ஆண்டுகளாக, ஜூன், ஜூலையில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. இதனால், கலந்தாய்வு முடியும் வரை, ஆசிரியர்கள், கற்பித்தல் பணியில், ஈடுபாடு காட்டுவதில்லை. மாறாக, தாங்கள் விரும்பும் இடங்களுக்கு, மாறுதல் உத்தரவு வாங்குவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். இதற்காக, பள்ளிகளுக்கும் செல்லாமல், மாறுதல் உத்தரவு வாங்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

படிப்பு பாதிப்பு : குறிப்பாக, ஆளுங்கட்சி பிரமுகர்களை சந்திப்பதற்காகவும், தங்கள் மாவட்ட அமைச்சரை சந்தித்து, பரிந்துரை கடிதங்களை பெறவும், சென்னைக்கு பறந்து வந்து விடுகின்றனர். இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. இதை அறிந்த பள்ளிக் கல்வி இயக்குனரகம், கலந்தாய்வை, கோடை விடுமுறை காலமான மே மாதத்திலேயே, நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக, ஆசிரியர் வகை வாரியாக, தனித்தனியாக, கலந்தாய்வு தேதி பட்டியலை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்காக, கல்வித் துறை அனுப்பி வைத்துள்ளது. பொது மாறுதல் கலந்தாய்வை, காலம் தாழ்த்தி நடத்துவதில் ஏற்படும் பிரச்னைகளை, கல்வித் துறை உயர் அதிகாரிகளும், நன்கு உணர்ந்துள்ளதால், இயக்குனரகத்தின் திட்டத்திற்கு, ஒப்புதல் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்-லைன் முறை : மேலும், "ஆன்-லைன்' முறையில், அனைத்து ஆசிரியர்களுக்கும், கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. அரசு அனுமதி அளித்ததும், பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை வெளியாகும்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் கூறியதாவது: பள்ளி துவங்கிய பின், கலந்தாய்வை நடத்துவதால், மாணவர்களுக்கு மட்டுமில்லாமல், ஆசிரியர்களுக்கும், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. தங்கள் பிள்ளைகளை, மாறுதலாகிச் செல்லும் இடங்களில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பதில், கடுமையான பிரச்னைகளை சந்திக்கின்றனர். தற்போது, முன்கூட்டியே, கலந்தாய்வை நடத்துவது என்பது வரவேற்கத்தக்கது. இதனால், மாறுதலாகிச் செல்லும் இடங்களில், தங்கள் பிள்ளைகளையும், முன்கூட்டியே பள்ளிகளில் சேர்ப்பதற்கான பணிகளில், ஆசிரியர்கள் கவனம் செலுத்த முடியும்.

காலியிட விவரங்கள் மற்றும் கலந்தாய்வு அட்டவணையை, ஏப்ரல் இறுதியிலேயே வெளியிட வேண்டும். ஏனெனில், ஆசிரியர்கள், கோடை விடுமுறைக்காக, சொந்த ஊர்களுக்கு செல்வர்.

கலந்தாய்வு அட்டவணையை, முன்கூட்டியே வெளியிட்டால், அதற்கேற்ப, அவர்கள், தங்கள் பயணத்தை, திட்டமிட முடியும். முன்கூட்டியே கலந்தாய்வு நடத்தும் திட்டத்தை, இந்த ஆண்டுடன் நிறுத்தி விடாமல், ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தியாகராஜன் கூறினார்.

Popular Posts