மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) வழங்கப்பட்டுள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இது செல்லாது என அறிவிக்கக்கோரி இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

           இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட் விசாரித்து இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லும் என அறிவித்தது. அதே சமயம் அதிக வருமானம் ஈட்டும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை அளிக்கக்கூடாது என உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு சலுகை அளிக்க கடந்த 2008ம் ஆண்டு மத்திய அரசு முடிவு செய்தது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த வருமான வரம்பை மறுபரிசீலனை செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
                  இந்நிலையில் நகர் புறங்களில் வருமான வரம்பை ரூ. 12 லட்சமாகவும், கிராம புறங்களில் வருமான வரம்பை ரூ. 9 லட்சமாகவும் உயர்த்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்தது. இதை தொடர்ந்து வருமான வரம்பை உயர்த்துவது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான அமைச்சரவை குழு நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த அமைச்சரவை குழு கூட்டத்தில் பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி, மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் பல்லம்ராஜு, சமூக நீதி துறை அமைச்சர் செல்ஜா, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
                   இந்த குழு நேற்று தீவிர ஆலோசனை நடத்தியது. வருமான வரம்பை ரூ. 7 லட்சமாக உயர்த்த வேண்டும் என வீரப்ப மொய்லி, நாராயணசாமி, வயலார் ரவி ஆகியோர் கோரிக்கை வைத்தனர். வருமான வரம்பை அதிக அளவுக்கு உயர்த்தினால் ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து வருமான வரம்பை ரூ. 6 லட்சமாக உயர்த்துவது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகு இது நடைமுறைக்கு வரும். ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் வரை வருமானம் ஈட்டும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இனி இடஒதுக்கீடு சலுகையை அனுபவிக்கலாம்.

Popular Posts