இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் குழுவில் நிகழ்த்தப்பட்ட அவமானம்

ஆறாவது ஊதியக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தியதில் இருந்தே இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியப் பிரச்சினை தொடங்கி அது ஒரு நபர் குழுவில் தீர்க்கப்படும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மத்திய அரசு வழங்கும் ஊதியமான 9300-34800 + 4200 என்ற ஊதியத்தை வழங்க இயலாமைக்குப் பல்வேறு நொண்டிச் சாக்குகளைக் கூறிய கடந்த கால அரசு, அதற்குப் பதிலாக ரூ 750 ஐ தனி ஊதியமாக 01.01.2011 முதல் வழங்கியது. 

இதனால், 01.01.2006 முதல் 31.12.2010 வரை இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரியாசிரியர் பதவி உயர்வு பெற்றுச் சென்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ரூ 750 தனி ஊதியத்தை இழந்தது மட்டுமல்லாமல் தமக்குப் பின்னால் அதாவது 01.01.2011க்குப் பிறகு பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்களைக் காட்டிலும் குறைவான ஊதியத்தைப் பெறும் நிலைக்கு ஆளாயினர். பல்வேறு சங்கவாதிகள் இப்பிரச்சினை சார்ந்த விரிவான கருத்துருக்களை மூன்று நபர் குழுவுக்கு வழங்கப்பட்டு தனி ஊதியத்தை 01.01.2006 முதல் கருத்தியலாகவாவது வழங்கப்பட்டால்தான் ஊதிய முரண்பாடுகள் தீரும் எனத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. 
நீண்ட காலமாக மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற தொடக்கப் பள்ளி முதல் முதுகலை ஆசிரியர் அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு சங்கங்களால் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டும், போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டும் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால் மூன்று நபர் குழுவின் அறிக்கையில் இப்பிரச்சினை சார்ந்த ஒரு அம்சம் கூட இல்லாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது. 
அதே சமயம் ஆசிரியர் அல்லாத பிற துறைகளுக்கு ஏராளமான திருத்தங்களை வாரி வழங்கியிருக்கிறது. இவ்வாறிருக்கையில், ரூ 750 தனி ஊதியத்தை 01.01.2011 முதல் வழங்கியதை எவ்வித மாற்றமும் செய்யாத மூவர் குழு, தற்போது உதவியாளர்களுக்கு மட்டும் தனி ஊதியத்தை 01.01.2006 முதல் கருத்தியலாகவும் 01.04.2013 முதல் பணப்பயன் பெறும் வகையிலும் வழங்கியிருக்கிறதே! இது மட்டும் எப்படி சாத்தியமாயிற்று? தனக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? ஒரு கண்ணுக்கு வெண்ணையயும், மற்றொரு கண்ணுக்கு சுண்ணாம்பையும் ஏன் வைக்க வேண்டும்? 01.01.2006 முதல் கருத்தியலக்கத்தானே வழங்கக் கோருகிறோம்? அது அரசுக்கென்ன பெரும் நிதிச்சுமையையா ஏற்படுத்தப்; போகிறது? மாற்றாக பல்வேறு ஊதிய முரண்பாட்டைத்தானே களையப்போகிறது! ஆகவே மூன்று நபர் குழுவின் செயல்பாடுகள் ஆசிரியர்களை குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களை அவமானப்படுத்துவதாகவே அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.ஆசிரியர்களே, சிந்திப்பீர்!

Popular Posts