உண்மைகள் - கசக்கும்

நேற்று ஆசிரியர் இயக்க பணிகளில் தீவிரமாக உள்ள மாற்று இயக்க நண்பர் ஒருவருக்கு சுதந்திர தின வாழ்த்து பரிமாறிக் கொண்டேன். அப்பொழுது நண்பர் இந்த தலைவர்கள் திருந்த மாட்டார்கள் போலும். மேடையில் ஒன்றும் செயலில் ஒன்றும் செய்து நம்மை குழப்பி விடுகிறார்கள் என்றார். கூட்டு சங்க நடவடிக்கை கோரிக்கை வலுத்து வரும் நிலையில் சில சங்கங்கள் வாய் மூடி மவுனம் காப்பது என்பது இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நீர்த்து போகச்செய்யும் தந்திரம் என்றார். அடுத்து அவர் கூறியது நம்மை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை வென்றெடுத்துக் கொடுத்தால்  தற்பொழுது பணியில் சேர்ந்தவர்கள் நம்மை மதிக்க மாட்டார்கள் எனவும், கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்பது போல் கொடுத்து ஊடகங்களில் செய்தி வெளியிடுவதன் மூலம் இடைநிலை ஆசிரியர்களை நம் பிடியில் தொடர்ந்து நிலை நிறுத்தவும், தொடர்ந்து தலைமை பதவிகளில் சுகம் காணவும் சில தலைமைகள் திட்டம் தீட்டியுள்ளதாகவும் நம்மிடம் தெரிவித்தார். அதனால்தான்  கூட்டு போராட்டத்திற்கு வராமல் கடந்த கூட்டுப்போராட்ட வரலாறுகளை  தம் உறுப்பினர்களிடம் திரித்து கூறி தவறான சிந்தனையை அவர்களின் மனதில் பதிய வைப்பதாகவும் கூறினார். இந்த விசயங்களை நம்மால் நம்பவும் முடியவில்லை. நடக்கிற நிகழ்வுகளை பார்த்தால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. அவர் எந்த இயக்கத்தில் இந்த மாதிரி நிகழ்வுகள் என்பதை கூற மறுத்துவிட்டார். நாம் அதை நம்ப இயலாத நிலையில்தான் உள்ளோம். இன்றைய அரசியல் சூழ்நிலையில் கூட்டு  நடவடிக்கை என்பது பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கை வென்றெடுக்க வேண்டும் என்ற பொதுநல சிந்தனையின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்க வேண்டும் மற்ற காழ்புணர்ச்சிகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது மற்ற சங்கங்களை குறை கூற பதிவிடவில்லை. இதை படிக்கின்ற ஆசிரியர் பெருமக்கள் எந்த இயக்கமாக இருந்தாலும் தாம் சார்ந்துள்ள இயக்க தலைமைகளை கூட்டு போராட்டத்திற்கு வலியுறுத்துவதன் மூலம் அரசாங்கம் நமது கோரிக்கையின் மீது கவனம் செலுத்த வழி பிறக்கும். ஆசிரியர் சங்கங்களுக்கிடையில் நான் பெரியவன், நீ பெரியவன் என சண்டையிட்டு கொள்வதன் மூலம் கடைசியில் பாதிக்கப்படுவது இடைநிலையாசிரியர்கள்தான். நாமெல்லாம் ஒரே தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகள்தான். ஒன்றுபட்ட இயக்கமாக இருந்து, சில பல காரணங்களுக்காக  நமக்கு விருப்பப்பட்ட இடங்களில் வாழ்கின்றோம். அதற்காக சகோதர உணர்வு மழுங்கி போய் விடுமா என்ன?. நாம் நம்மை நாமே தூற்றிக்கொண்டு  மாறி மாறி வசை பாடுவதை சில நண்பர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு தூற்றிக்கொள்வதால் நமது தலைமைகளுக்கு அது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடும். தலைவர்கள் என்ன முடிவெடுத்து கட்டளை இடுகிறார்களோ இதை சிரமேற்கொண்டு செயலாற்ற தோழனே தயாராக இரு. நிச்சயம் தலைவர்களிடம் இருந்து நல்ல முடிவை எதிர்பார்க்கும் சக தோழனாக நானும் இருக்கிறேன். என்னதான் இருந்தாலும் போராட்டங்களில் இடைநிலை ஆசிரியரின் பங்களிப்பு என்பது சொல்லிக்கிறது மாதிரி இல்லை. எந்த போராட்டத்திற்கும் வராமல் முதல் ஆளாக ஏ.டி.எம். இயந்திரங்களை நோக்கி ஓடி எவனோ போராடி பெற்ற பணபலன்களை அனுபவிக்கும் உணர்ச்சியற்ற உயிராய் இருப்பதை மாற்றிக்கொள். ஒரு புழு கூட கால் பட்டால் தன் தலை தூக்கி தன் எதிர்ப்பை பதிவு பண்ணுகிறது. ஓரறிவு படைத்த உயிரினத்திற்கே இந்த ரோஷம் என்றால் நமக்கு? சிந்தித்து பார். இயக்க பொறுப்பாளர்களுக்கும் குடும்பம் உண்டு. இயக்க பொறுப்பேற்றதற்காக தன் சுக துக்கங்களில் பங்கெடுக்காமல் இந்த ஆசிரியர் சமுதாயத்திற்காக தன் வாழ் நாளை செலவிடுகின்றான். அறிஞர் அண்ணாவையும் அவரது கொள்கைகளையும் மறந்த திராவிட கட்சிகளைப்போல சில ஆசிரியர் இயக்கங்கள் மாஸ்டர் இராமுண்ணியின் கொள்கைகள் மறந்துவிட்டன. எது எப்படி இருந்தாலும் கூட்டுப்போராட்டமே நம் துயர் துடைக்கும். இந்த பதிவு யார் மனதையும் காயப்படுத்தும் நோக்கில் வெளியிடப்படவில்லை. யாரையும் காயப்படுத்தினால் வருந்துகிறோம். சில உண்மைகள் கசக்கதான் செய்யும். குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. ஒன்று படுவோம்! வென்றெடுப்போம்!!!

இதுவரைநாம்பெற்றவெற்றிகளெல்லாம்
யாருடைய கருணையினாலும்
தயவினாலும் அல்ல.
நம்முடைய ஒற்றுமையால்...
போராட்டங்களால்...
தியாகங்களால்...
தோழமையுடன்.......   
ஆ.முத்துப்பாண்டியன், 
மாவட்டத்தலைவர், 
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, 
சிவகங்கை மாவட்டம்.

Popular Posts