அரசு ஊழியர் ஒருவர் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், கருணை
அடிப்படையில் குடும்பத்தினருக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம்
கிடையாது.அதேநேரத்தில் பணி நியமனம் கோரும் அந்தக் குடும்பத்தின் நபர்,
அந்தப் பணிக்குரிய கல்வித் தகுதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் பி.எஸ்.சௌகான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு மேலும்
கூறியதாவது: பணியில் இருக்கும்போது உயிரிழந்த ஊழியரின் குடும்ப சூழ்நிலை
மற்றும் பொருளாதார நிலையை, சம்பந்தப்பட்ட துறையின் தகுதிவாய்ந்த அதிகாரி
ஆராய வேண்டும்.வேலை வழங்கவில்லை எனில், அந்த குடும்பத்தால் நெருக்கடியை
சமாளிக்க முடியாது என்பதை உறுதிசெய்து கொண்ட பின்னால்தான், அந்தக் குடும்ப
உறுப்பினர்களில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். ஆனால் அந்த வேலைக்கு
நியமிக்கப்படுபவர், அதற்கான கல்வித் தகுதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்
என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ராஜஸ்தான் மாநில உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, எம்ஜிபி கிராம வங்கி
தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையின் போதுதான் நீதிபதிகள்
மேற்கண்டவாறு தீர்ப்பு அளித்தனர்.
இந்த வங்கியில் மூன்றாம் நிலை ஊழியராக
பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் கடந்த 2006, ஏப்ரல் 19-ஆம் தேதி மரணமடைந்து
விட்டார்.இதையடுத்து அவரது மகன் சக்ரவர்த்தி சிங், தனக்கு கருணை
அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று, அந்த வங்கிக்கு 2006, மே மாதம்
12-ஆம் தேதி விண்ணப்பம் அனுப்பினார். அதை அந்த வங்கி நிராகரித்து
விட்டது.இதையடுத்து, ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
சக்ரவர்த்தி சிங்குக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குமாறு வங்கி
நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வங்கி
நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை
நிராகரித்தது.
கருணை அடிப்படையில் பணி வழங்க, உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி மற்றும்
டிவிஷன் பெஞ்ச் கூறிய காரணங்கள், சட்டத்தின் பார்வையில் வலுவூட்டுவதாக
இல்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறி, அந்த தீர்ப்பை நிராகரித்தனர்.