பிற பணிக்கு (On Duty) செல்லும் தலைமை ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள்


பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில் சிலர், பள்ளி வேலை நாட்களில், பிற பணி என்ற பெயரில், வெளியூர் செல்வதும், சொந்த பணிகளை கவனிப்பதாகவும், அரசின் கவனத்திற்கு புகார் சென்றது. இதனால், அலுவலக பணிகளுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதை தவிர்க்க, பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி... பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும்.

பிற பணி விவரங்களை, பள்ளியில் பராமரிக்கப்படும் நடமாடும் பதிவேட்டில் பதிய வேண்டும். இதே விவரங்களை, சி.இ.ஓ., அலுவலக நடமாடும் பதிவேட்டிலும் இடம் பெற செய்ய வேண்டும். 

சி.இ.ஓ.,க்கள் தங்களது மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின், பிற பணிகளை அறிந்து, தேவைப்படும் பட்சத்தில், உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்திற்காக மட்டுமே, தலைமை ஆசிரியர்களை, சி.இ.ஓ.,க்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரில் வரவழைக்க வேண்டும்.

சி.இ.ஓ., - டி.இ.ஓ., அலுவலகங்களில் தபால் கொடுத்தல் போன்ற சாதாரண பணிகளுக்கு, பள்ளி அலுவலக ஊழியர் அல்லது பணி சுமையில்லாத பிற ஆசிரியர்களை பயன்படுத்தலாம். இந்த விதிமுறைகள் அடங்கிய உத்தரவு கடிதம், பள்ளிக்கல்வித் துறை மூலம், சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Popular Posts