புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிர்ப்பு கேரள அரசு ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்


புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து கேரளாவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற போராட்டத்தால் அரசு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல பள்ளிகள் மூடப்பட்டன. போராட்டத்துக்கு கேரள அரசு பஸ் தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்ததால் பயணிகளும் பாதிப்படைத்தனர்.

கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் சமீபத்தில் அறிமுகபடுத்தப்பட்டது. இதன்படி, ஊழியர்களும் தங்கள் ஊதியத்தில் இருந்து ஒரு பங்கை ஓய்வூதியத்துக்கு செலுத்த வேண்டும். இந்த திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பங்களிப்பு திட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் 8ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என அரசு ஊழியர் சங்கத்தினர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்தனர். ஆனால் கோரிக்கையை ஏற்க அரசு மறுத்ததுடன், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. ஆனால் அரசு ஊழியர்கள் திட்டமிட்டபடி நேற்று வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதனால் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை குறைவாக இருந் தது. அரசு ஆதரவு தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர்.

பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை குறைவாக இருந்தது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம் உட்பட பல மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பள்ளியை பூட்டி விட்டு சென்றனர். இதனால் மாணவர்களால் வகுப்பறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளிகளை பூட்டிச் சென்ற தலைமைஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய முதல்வர் உம்மன்சாண்டி உத்தரவிட்டார். இதற்கிடையே இந்த போராட்டத்துக்கு நேற்று கேரள அரசு பஸ் தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

முதல்-மந்திரி உம்மன் சாண்டி இதுபற்றி கூறுகையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்தும் வேலை நிறுத்தம் கண்டிக்கத்தக்கது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வேலைக்கு வருபவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். வேலைக்கு வருபவர்களை யாராவது தடுத்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதற்கிடையே இன்று காலை தமிழகத்தில் இருந்து கேரள செல்லும் பஸ்கள் அனைத்தும் கேரள எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் கேரளாவுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் களியக்காவிளை பகுதியில் நிறுத்தப்பட்டன. காலை 7.30 மணிக்கு மேல் பஸ் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை என்று கிடைத்த தகவலின் பேரில் மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டன.

Popular Posts