"ஓய்வூதியம் கொடுங்க; இல்லை உயிரை விட அனுமதிங்க!' ஜனாதிபதிக்கு கடிதம் - Dinamalar


 " எங்களுக்கு மூன்று ஆண்டுகளாக ஓய்வூதியம் கொடுக்கப்படவில்லை. இதனால், வறுமையில் வாடுகிறோம். வரும், 25ம் தேதிக்குள், ஓய்வூதியம் வழங்குங்கள்; இல்லையெனில், எங்கள் உயிரை போக்கிக் கொள்வதற்கு, அனுமதி கொடுங்கள்' என, மகாராஷ்டிராவைச் சேர்ந்த, 164 பேர், ஜனாதிபதிக்கு, உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



மகாராஷ்டிரா மாநிலம், யாவத்மால் மாவட்டத்தை சேர்ந்த சிலர், மத்திய அரசின் திட்டத்தில், முதியோர், மாற்றுத் திறனாளி, விதவை ஆகியோருக்கான, ஓய்வூதியங்களை பெற்று வந்தனர்.மூன்று ஆண்டுகளாக, இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை; பல்வேறு தரப்பினரை அணுகியும், பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து, ஓய்வூதியம் கிடைக்காத, 164 பேர், நேற்று, யவத்மாலில் உள்ள, வருவாய் துறை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கிருந்த தாசில்தாரிடம், தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு எழுதிய, கையொப்பமிட்ட மனுவை அளித்தனர்; அதில் கூறப்பட்டிருந்ததாவது:

குடியரசு தினத்தில் தற்கொலை :

மூன்று ஆண்டுகளாக, எங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. இதனால், பட்டினியில் வாடுகிறோம். எங்களுக்கு, வேறு வாழ்வாதாரம் எதுவும் இல்லை. எனவே, வரும், 25ம் தேதிக்குள், ஓய்வூதியம் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில், அதற்கு அடுத்த நாள்; அதாவது, குடியரசு தினத்தில், ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொள்வதற்கு, எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில், தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, யவத்மால் கலெக்டர், அஸ்வின் முட்கால் கூறியதாவது: சம்பந்தபட்ட பகுதிகளில், போலியான தகவல்களை கொடுத்து, ஓய்வூதியம் பெறுவதாக புகார் வந்தது. இதையடுத்து, ஒரு சிலருக்கு, ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அஸ்வின் முட்கால் கூறினார்.

Popular Posts