"நாட்டில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, முன்பருவ கல்வி வழங்கினால் மட்டுமே, இளைய சமுதாயம் பக்குவமாக வளரும்," என, மலேசியாவில் நடந்த ஆசியன் பசிபிக் பிராந்திய கூட்டத்தில், இந்திய பிரதிநிதி ஜோசப் சேவியர் பேசினார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், முன்பருவ கல்வியை விரிவுபடுத்தக் கோரி, ஆசியன் பசிபிக் பிராந்திய ஆய்வு கூட்டத்தில், இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், நேபாளம், தென்கொரியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், சிவகங்கை மாவட்ட செயலாளர் ஜோசப் சேவியர், இந்திய பிரதிநிதியாக, இம்மாநாட்டில் பங்கேற்று பேசியதாவது, கல்வி, மனிதனின் பிறப்பில் இருந்து துவங்குகிறது. பெற்றோர்கள், குழந்தைகளின் முதல் தேவை கல்வி, என உணர்ந்துள்ளனர். ஆனால், தரமான கல்வியை தர முடியாத சூழல் உலகில் பல வளர்ச்சியுறா நாடுகளில் காணப்படுகிறது.
முன்பருவ கல்வி என்பது மனிதனின் அடிப்படை உரிமை. ஐ. நா., பொதுச் செயலாளரின் விருப்பமும் அதுதான். எனவே, குழந்தை பிறந்த 5 வயதிற்கு முன், தரமான முன்பருவ கல்வியை வழங்கவேண்டும். அப்போது தான், இளைய சமுதாயம் பக்குவமாக வளரும்.
மனிதன் மூளையில், 90 சதவீதம் 5 வயதிற்கு முன்பே வளர்ந்து விடுவதாக, மனநல உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இக்கல்வி முறை சிறக்க, நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை முன்பருவ கல்வியில் நியமித்து, தரமான சம்பளம் வழங்க வேண்டும்.
இக்கல்வி முறையை ஆஸ்திரேலியா பின்பற்றி வருகிறது. இம்மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளை, அகில உலக கல்வி அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆசிரியர் அமைப்புகள் மூலமாக, சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு தெரியபடுத்தி, முன்பருவ கல்வி முறையை மேம்படுத்த, ஏற்பாடுகளை செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.