அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், பயிற்சி தரப்படும் நாளன்று, அதிகமான ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பதால், அரசின் முயற்சியும், நிதியும் வீணாவதுடன், மாணவர் நலனும் பாதிக்கப்படுகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், முதல் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரின் கல்வித்தரத்தை மேம்படுத்த, பல்வேறு செயல் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதில், ஐந்தாம் வகுப்பு வரை, செயல்வழிக்கற்றல் முறையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, படைப்பாற்றல் முறையும் செயல்படுத்தப்படுகிறது.
இதில், ஒவ்வொரு ஆண்டும் பாடத்திட்டங்களில் ஏற்படும் மாற்றம், புதிதாக சேர்க்க வேண்டிய பகுதி உள்ளிட்டவை குறித்து, அனைத்து ஆசிரியர்களுக்கும், 15 நாட்கள் பயிற்சியளிக்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் நடைபெறும் இப்பயிற்சிகளில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என, அனைவருக்கும் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
பயிற்சியன்று கலந்து கொள்ள முடியாத கட்டாயம் ஏற்படும் பட்சத்தில், அப்பகுதி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அனுமதி பெற்று, விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என, விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, ஆசிரியர்கள் பயிற்சிக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
கடந்த, 5ம் தேதி சேலம் மாவட்ட துவக்க மற்றும் நடுநிலை ஆசிரியர்களுக்கு கலை மற்றும் கைவினை பொருட்கள் தயாரிப்பு குறித்து, அந்தந்த வட்டார வள மையங்களில், ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில், கலந்து கொள்வதற்காக, பல ஆசிரியர்கள் விடுமுறை எடுத்து, பயிற்சி வகுப்பில் பங்கேற்பதை தவிர்த்தனர். இதனால்,பயிற்சியில், 20 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் கூறியதாவது: பல கோடி ரூபாய் செலவில், புதிய கல்வி முறைகளை அரசு செயல்படுத்துகிறது. இவற்றை அமல்படுத்துவதற்காக, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அப்பயிற்சியின் போது, விடுமுறை எடுப்பதால், அத்திறன்களை மாணவர்களிடம் கொண்டு செல்வதில் தடங்கல் ஏற்படுகிறது.
மாணவர் நலன் பாதிக்கும் என்பதாலேயே, பயிற்சியின் போது, விடுமுறை வழங்கக்கூடாது என, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், அவர்கள் ஒவ்வொரு பயிற்சியின் போதும் ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுக்க அனுமதி வழங்குகின்றனர். இதனால், அரசு திட்ட நிதி வீணாவதுடன், மாணவர் நலனும் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.