ஆசிரியர்கள் போராட்டத்தை தடுக்க மாநில கல்வித்துறை அதிரடி உத்தரவு

ஆசிரியர் சங்கங்கள் சார்பில் அடிக்கடி நடக்கும் போராட்டங்களால் வெறுத்துப்போன மாநில கல்வித்துறை நிர்வாகம், போராட்டங்கள் நடத்த திடீர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள், பல்வேறு சங்கங்கள் சார்பில் இயங்கி வருகின்றனர். சமீபகாலமாக, ஆசிரியர் பணி மாறுதலில் ஆங்காங்கே பிரச்னைகள் எழுந்தது. சில இடங்களில், முறைகேடான இட மாறுதலை கண்டித்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் மாநில அளவில் நடந்தன.
இந்நிலையில் இது போன்ற சம்பவங்களை அறவே தடுக்கும் பொருட்டு, அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும், மாநில தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், முன் அனுமதி பெறாமல் ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு எத்தகைய போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபடும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "இடமாறுதலில் மறைக்கப்பட்ட பணியிடம், முறைகேடுகளை கண்டித்தும், கல்வித்துறையில் நீண்ட கால கோரிக்கைகள் நிறை வேற்றாததை கண்டித்துதான் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. குறைபாடு இல்லாவிட்டால் எதற்காக ஆர்பாட்டம் நடத்துகிறோம்,” என்றார்.

Popular Posts