இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் மதுரைக்கு என தனிச் சிறப்பிடம் உண்டு. புராண கால நகரான மதுரையானது தமிழ் சங்கத்தின் தலைநகராக மட்டுமல்ல, சுதந்திரப் போராட்டத்தில் பெரும் திருப்பத்தைத் தந்த மண்ணாகவும் திகழ்கிறது என்பதை வரலாறுகள் சுட்டிக் காட்டுகின்றன.
போக்குவரத்து வசதியற்ற அக் கால கட்டத்தில் தமிழகத்தில் காந்தியடிகள், சிற்றூர்களுக்குக் கூட சென்று உரையாற்றி வந்திருப்பது பெரும் வியப்பே. அப்படிப்பட்ட காந்தியை மகாத்மா எனும் அளவுக்கு மாற்றிய மண் மதுரை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
காந்தியடிகள் முதன்முறையாக மதுரைக்கு 1919-இல் வருகை புரிந்துள்ளார். அவர் தற்போது மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்துக்கு எதிரே உள்ள இடத்தில் இருந்த தியாகி ஜார்ஜ் ஜோசப் வீட்டில் (தற்போது அது தனியார் விடுதியாகிவிட்டது) தங்கினார். சுதந்திரப் போராட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் அவர் ஆலோசித்தார்.
பின்னர், 1921-இல் மதுரைக்கு மீண்டும் அவர் வந்தார். அப்போது மதுரை மேலமாசி வீதியில் குஜராத் தொழிலதிபர் சாங்கோயி என்பவரது வீட்டில் (தற்போது காதி கிராப்ட் இல்லம்) தங்கினார்.
மதுரையில் தங்கிய அவர், மதுரைக் கல்லூரி மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பேசச் சென்றார். அப்போது மிதவாதிகளுக்கும், தீவிரவாத கொள்கையுடையவர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம், கூச்சல், குழப்பத்தால் காந்தியடிகளால் சிரமமின்றி உரை நிகழ்த்த முடியவில்லை.
இந்த நிலையில், அவர் மதுரை கிராமப் பகுதிகளைச் சுற்றிவந்தார். அங்கு விவசாயிகள் மேலாடை இன்றி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்திய மக்கள் இவ்வளவு வறுமையில் இருக்கும்போது தான் மட்டும் நவநாகரிகமாக கோட்டு, சூட்டுடன் இருப்பது சரியல்ல என நினைத்தார்.
அன்றிரவே காந்தி பொட்டலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்ற வந்தபோது அரையாடையுடன் முதன்முதலில் தோன்றினார். அவர் முதன்முதலில் அரையாடை மனிதராகத் தோன்றி பேசியதாலேயே அந்த இடத்துக்குத் தற்போதும் காந்தி பொட்டல் என்றே பெயர்.
மதுரைக்கு அவர் 1927-ஆம் ஆண்டு வந்தார். அதன்பின், 1934-ல் மதுரை வந்தபோது அவரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு அழைத்தனர். ஆனால், ஹரிசனங்கள், பிற்படுத்தப்பட்டோர் நுழையாத கோயிலுக்குள் தான் செல்ல விரும்பவில்லை எனக் கூறி விட்டார்.
அதன்பின்னர், காந்தியடிகளின் ஆலோசனையின்பேரில் தியாகி வைத்தியநாதய்யர் தலைமையில் மீனாட்சியம்மன் திருக்கோயிலுக்குள் ஹரிசனங்களை அழைத்துச்செல்லும் ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. பின்னர், 1946-இல் மதுரை வந்தபோது காந்தியடிகள் மீண்டும் மீனாட்சியம்மன் திருக்கோயிலுக்குள் சென்றார்.
காந்தியடிகள் மதுரைக்கு ரயில் மூலம் வந்துள்ளார். அவர் காந்திபொட்டல், எட்வர்டு ஹால், மதுரைக் கல்லூரி மைதானம் உள்ளிட்ட இடங்களில் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். சேதுபதி மேல்நிலைப்பள்ளி, செüராஷ்டிர கிளப், அப்போதைய சிவகங்கை மாளிகை (தற்போது மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியாக உள்ளது), சொக்கிகுளத்தில் உள்ள என்.எம்.ஆர். மாளிகை உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ளார்.
மதுரையில் காந்தி மியூசியம் 1959-இல் தொடங்கப்பட்டது. அங்கு காந்தியடிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகும்போது கட்டியிருந்த ஆடை, கண்ணாடிகளுடன் அவரது அஸ்திக் கலசமும் வைக்கப்பட்டுள்ளது. காந்தியடிகளின் அரிய புகைப்படங்கள், அவரது கையெழுத்துடன் கூடிய கடிதங்கள் என அரிய வரலாற்றுப் பொக்கிஷமாகவே காந்தி அருங்காட்சியகம் திகழ்கிறது.
காந்தியடிகள் பேசிய, அரையாடையுடன் தோன்றிய இடங்களில் அதுகுறித்த நிகழ்வுகள் எதுவும் எழுதி வைக்கப்படவில்லை. ஆம்...நாம் நமது பழைய பெருமை, வரலாறுகளை அலட்சியப்படுத்தி வருகிறோம். அதனால் நமது குழந்தைகள் பாதை தெரியாத பயணிகளாகவே வாழ்க்கையில் திசைமாறிச் செல்லும் நிலை உள்ளது.
மதுரை என்றாலே அது....முரட்டுத்தனமானவர்களுக்கான ஊர் என்பது போலவே நமது நகர் பற்றிய பார்வை பரவி வருகிறது. இது சரியல்ல. ஆதி முதல் அந்தம் வரை சரித்திர நிகழ்வுகள் மூலம் சமூகத்துக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது மதுரை என்பதை உலகறியச் செய்வது அவசியம். அதற்கு மாநகராட்சி முதல் மாவட்ட நிர்வாகம் வரையில் தியாக சீலர்களின் சிலைகள் முன்பு, வரலாறுகளை எழுதி வைக்க முன்வரவேண்டும்.