பெரு நகரங்களில், கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம். இல் மாதம் 5 முறை மட்டும் கட்டணமின்றி பணம் எடுப்பதற்கான புதிய திட்டத்தை அமல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
வங்கி வாடிக்கையாளர் பிற வங்கி ஏடிஎம்களில் மேற்கொள்ளும் இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை மாதத்துக்கு 3 ஆக குறைகிறது. அதுபோல், கணக்கு வைத்துள்ள வங்கியிலும் 5 முறைக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள், 2009 ஏப்ரல் முதல் பிற வங்கி ஏடிஎம் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். இதனால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் சம்பந்தப்பட்ட வங்கிக்கு ரூ20 கட்டணமாக தரவேண்டியுள்ளது.
இது சுமையாக உள்ளதாக வங்கிகள் முறையிட்டன. வங்கிகள் வேண்டுகோளை ஏற்ற ரிசர்வ் வங்கி, பிற வங்கி ஏடிஎம்களில் மாதம் 5 இலவச பரிவர்த்தனை செய்ய அனுமதித்தது.
இருப்பினும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பிற வங்கி ஏடிஎம்களையே பயன்படுத்திய, அந்த எண்ணிக்கையை மேலும் குறைக்க வங்கி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
கடந்த மார்ச் மாதத்தின்படி, ஏ.டி.எம். எண்ணிக்கை 1.6 லட்சத்துக்கு மேலும், டெபிட்கார்டு மூலமாக பொருட்கள் வாங்கும் வசதி 10.65 லட்சம் இடங்களுக்கு மேலும் உள்ளன.
இந்நிலையில், இவற்றுக்கான வங்கி செலவுகளையும் கருத்தில் கொண்டு மும்பை, புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய பெருநகரங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் பிற வங்கி ஏடிஎம்மில் மேற்கொள்ளும் பரிவர்த்தனையை 3 ஆக குறைக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம்மை 5 முறை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அதற்கு மேல் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.20 கட்டணம் வசூலிக்கலாம்.
சிறு மற்றும் அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கும், பெரு நகரங்கள் தவிர பிற இடங்களுக்கும் இந்த கட்டுப்பாடு தேவையில்லை எனவும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையில் கூறியுள்ளது.
நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.