அரசுப் பள்ளிக்குச் சென்ற மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டை கேட்டது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தர்மபட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்தாண்டு நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், ஊராட்சித் தலைவர் காந்திமதி சேதுராமனை தேசியக் கொடி ஏற்ற, தலைமையாசிரியர் செல்வமணி அனுமதிக்கவில்லை. இதுகுறித்து தலைவர் காந்திமதி சேதுராமன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, புகார் குறித்து விசாரணை நடத்த கல்வி அதிகாரிக்கு ஆட்சியர் ராஜாராமன் உத்தரவிட்டார்.
இதன்பேரில், தர்மபட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி விசாரணைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தலைமையாசியர் செல்வமணி, கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டையைக் கேட்டுள்ளார். மேலும், பள்ளி அலுவலக ஆவணங்களை தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தலைமையாசிரியர் செல்வமணியை இடைநீக்கம் செய்து கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், வட்டார உதவி தொடக்கக் கல்வி அதிகாரி திருநாவுக்கரசு வியாழக்கிழமை, போலீஸ் பாதுகாப்புடன் தர்மபட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு வந்து இடைநீக்க உத்தரவை செல்வமணியிடம் கொடுத்தார். மேலும் இப் பள்ளியின் தலைமையாசிரியராக அங்கு ஆசிரியையாகப் பணியாற்றும் ரேகா என்பவர் (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.