உதவித்தொகை: அறிவியல் படிக்க மாதம்-ரூ.5 ஆயிரம்

பள்ளி மாணவர்களை அறிவியல் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பணிகள் பக்கம் ஈர்த்திட மாணவர் அறிவியல் ஊக்கத்தொகை திட்டம் (Kishore Vaigynanic Protsahan Yojana-KVPY) என்ற புதுமையான கல்வி உதவித்தொகைத் திட்டத்தை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயல்படுத்தி வருகிறது.


நேர்முகத் தேர்வு

படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களை அறிவியல் சம்பந்தப்பட்ட படிப்புகளில் சேரவைப்பது இந்தத் திட்டத்தின் தலையாய நோக்கம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வுசெய்யப்படும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், உயிரி-வேதியியல், நுண்ணுயிரியல், உயிரி தொழில்நுட்பம் போன்ற அறிவியல் சம்பந்தப்பட்ட பட்டப் படிப்பு படிப்பதற்கு மாதம்தோறும் ரூ.5 ஆயிரமும், முதுகலை படிக்க ரூ.7 ஆயிரமும் கல்வி உதவித்தொகை (Fellowship) பெறலாம். மேலும், பட்டப் படிப்பு படிப்போருக்கு எதிர்பாராத கல்விச் செலவினங்களுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரமும், இதேபோல் முதுகலைப் படிப்புக்கு ரூ.28 ஆயிரமும் தனியாக வழங்கப்படும். இதற்குத் தகுதியான மாணவர்கள் திறனறித் தேர்வு (100 மதிப்பெண்) மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இப்பணியைப் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science_IISc) மேற்கொள்கிறது.

மூன்று வகையான மாணவர்கள்

இந்த உதவித்தொகைத் திட்டத்திற்கு மூன்று வகையாக மாணவர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

முதலாவது தற்போது பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கான பிரிவு. எஸ்எஸ்எல்சி தேர்வில் அறிவியல், கணிதப் பாடங்களில் குறைந்தபட்சம் 80 சதவீத மதிப்பெண்கள் தேவை. எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் எனில் 70 சதவீத மதிப்பெண்கள் போதுமானது. தேர்வுசெய்யப்படும் மாணவர்களுக்குப் பட்டப் படிப்பு முதலாகத்தான் உதவித்தொகை வழங்கப்படும். இதற்கிடையே, அவர்கள் நன்கு பயிற்றுவிக்கப்படுவார்கள். இதற்காக அவர்களுக்கு மத்திய அரசின் செலவில் முகாம்கள் நடத்தப்படும். அவர்கள் பிளஸ்-2 தேர்வில் அறிவியல் பாடங்களில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் (எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 50 சதவீதம்) எடுக்க வேண்டியது அவசியம்.

இரண்டாவது பிரிவு பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கானது. பிளஸ்-2 முடித்துவிட்டு அறிவியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இதற்குத் தகுதியுடையவர்கள். மேற்குறிப்பிட்ட மதிப்பெண் தகுதிதான் இதற்கும்.

மூன்றாவது பிரிவு தற்போது அறிவியல் பட்டப் படிப்பில் முதல் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு உரியது. அவர்கள் எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 தேர்வில் மேற்குறிப்பிட்ட மதிப்பெண் தகுதி பெற்றிருக்க வேண்டும். பெல்லோஷிப் பெறுவதற்கு முன்பாகப் பட்டப் படிப்பில் முதல் ஆண்டில் 60 சதவீத மதிப்பெண்கள் தேவை. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 40 சதவீத மதிப்பெண்கள் போதும். ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு (Integrated M.Sc. M.S.) படிக்கும் மாணவர்களும் இந்த உதவித்தொகைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

நவம்பரில் தேர்வு

இதற்கான 2014-ம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் தேர்வு நவம்பர் 2-ந் தேதி சென்னை, பெங்களூர், மும்பை, கொச்சி, புனே, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஆன்லைனிலும், பல்வேறு முக்கிய நகரங்களில் தேர்வு மையங்களிலும்

(Off-line) நடத்தப்பட உள்ளது. இதற்கு www.kvpy.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள், பி.எஸ்சி. முதல் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் மாதம் 8-ந் தேதிக்குள் ஆன்லைன் மூலமாகவோ இந்த இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலமாக

விண்ணப் பித்தவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை அக்டோபர் 2-வது வாரத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பம் அனுப்பி விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுச்சீட்டு தபால் மூலம் அனுப்பப்படும். தேர்வு மையங்களி்ன் விவரம் அக்டோபர் முதல் வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

Popular Posts