ஃபேஸ்புக் பக்கம் தொடங்கியது தமிழக தேர்தல் ஆணையம்

மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் ஃபேஸ்புக் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. 

தேசிய வாக்காளர் தினத்தை (ஜனவரி 25) முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் தினம் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 
இது தொடர்பாக நிருபர்களிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறும்போது, "சென்னை கவர்னர் மாளிகையில் சனிக்கிழமை காலை நடைபெறும் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில், புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். 
தமிழகத்தில் உள்ள மற்ற 27 லட்சம் புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் புகைப்பட அடையாள அட்டை சனிக்கிழமையன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வழங்கப்படும். அன்றைய தினம் வாங்காதவர்களின் வீடுகளுக்கு தேர்தல் துறையினரே நேரில் சென்று வாக்காளர் அட்டையை வழங்குவார்கள். அதை வீட்டில் உள்ள ஒருவர் கையெழுத்திட்டு பெற்றுக் கொள்ளலாம். 
அப்படி பெற முடியாதவர்கள், பின்னர் தேர்தல் பதிவு அதிகாரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் எப்போது வேண்டுமானாலும் பெயர் சேர்க்கலாம். 
"கண்ணியமாக வாக்களியுங்கள்" என்னும் கருத்தை மையமாக வைத்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள், பேரணிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்படவுள்ளது.
ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் – தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ள பிரசார விளம்பரப் படம் விரைவில், தொலைக்காட்சி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும். 
இதன் மையக்கருத்து, "வாக்காளர்கள் கண்ணியமாக வாக்களிக்க வேண்டும். பணத்துக்காக வாக்கை விற்காதீர்," என்பன போன்ற கருத்துக்கள் இடம்பெறும்" என்றார் பிரவீண்குமார். 
ஃபேஸ்புக் பக்கம் குறித்து கூறும்போது, " நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, யூத் எக்ஸ்னோரா அமைப்புடன் இணைந்து, பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் www.facebook.com/tnelection2014 என்ற ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கியுள்ளோம். 
முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் வாக்காளர்களைக் கவர்வது, நியாயமான முறையில் தேர்தலை வாக்காளர்கள் எதிர்கொள்ளச் செய்வது, வாக்களிப்பதன் அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நோக்கத்துக்காகவே இந்த சமூவவலைத்தளப் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது" என்றார் அவர்.

Popular Posts