விடுப்பு விண்ணப்பங்களை, ஏ.இ.இ.ஓ., அலுவலகத்துக்கு அனுப்பாமல், சில
தலைமையாசிரியர்கள் மோசடி செய்வதாக வந்த புகாரை அடுத்து, நாமக்கல்
மாவட்டத்தில் ஏ.இ.இ.ஓ.,க்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில், 32 மாவட்டங்களில், 44 ஆயிரத்து, 840 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அவற்றில், இரண்டு லட்சத்து, 12 ஆயிரத்து, 105 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பளம், சேமநல நிதியில் இருந்து கடன் வழங்குதல், உயர்கல்வி பயில அனுமதி வழங்குதல், ஊக்க ஊதிய உயர்வுகளை பெற்றுத்தருதல், தற்செயல், ஈட்டிய, மருத்துவ விடுப்புகளுக்கு அனுமதி வழங்குதல், பணி பதிவேடு பராமரித்தல் உள்ளிட்ட பணிகள், அந்தந்த ஒன்றியத்தில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, 12 நாட்கள் தற்செயல் விடுப்பும், 17 நாட்கள் ஈட்டிய விடுப்பு, ஐந்து ஆண்டில், 90 நாட்கள் மருத்துவ விடுப்பும் அரசு வழங்கி வருகிறது. இந்த விடுப்பில், பள்ளியில் பணியாற்றும் உதவியாசிரியர்களின் ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு விண்ணப்பங்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் பரிந்துரை செய்து, ஏ.இ.இ.ஓ., அலுவலகத்துக்கு அனுப்புகின்றனர்.
மேலும், தலைமையாசிரியர்களின் தற்செயல்விடுப்பு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு விண்ணப்பங்களில் அவர்களே கையொப்பமிட்டு, அனுப்பி வருகின்றனர். அதில், தற்செயல் விடுப்பு தவிர்த்து, ஈட்டிய, மருத்துவ விடுப்புகளின் விபரங்களை, அந்தந்த ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர்களின் பதிவேட்டில், ஏ.இ.இ.ஓ., பதிவு செய்வார்.
அவற்றில், உதவி ஆசிரியர்களின் விண்ணப்பங்களை, தலைமையாசிரியர் கையொப்பம் இட்டு, பரிந்துரை செய்து, ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில் கொண்டு சேர்ப்பதால், பள்ளி உதவியாசிரியர்களின் விடுப்பு விபரங்கள், முறையாக பணி பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது.
ஆனால், தலைமையாசிரியர்களின் ஈட்டிய, மருத்துவ விடுப்புகளின் விண்ணப்பங்களில், அவர்களே கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். அவற்றில் பெரும்பாலான தலைமையாசிரியர்களின் விடுப்பு விபரங்கள், பள்ளியில் உள்ள ஆசிரியர் வருகை பதிவேட்டில் குறிக்கப்பட்டிருக்கும்.
விடுப்பு சம்பந்தமான விண்ணப்பங்களை, ஏ.இ.இ.ஓ., அலுவலகத்துக்கு அனுப்புவதில்லை. அதனால், தலைமையாசிரியர்களின் விடுப்பு விபரங்கள் பணி பதிவேட்டில் பதிய வாய்ப்பு இல்லாமல் போகிறது. இந்த விடுப்பு விண்ணப்பங்களை, ஏ.இ.இ.ஓ., அலுவலகத்துக்கு அனுப்பாமல், சில தலைமையாசிரியர்கள் மோசடி செய்து வருவதாக புகார் எழுந்தது.
மாநில தொடக்கக்கல்வி இயக்குனர், அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள ஏ.இ.இ.ஓ., அலுவலர்கள் மூலம், தலைமையாசிரியர்களின் விடுப்பு மோசடி குறித்து ஆய்வு செய்ய வேண்டும், என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில், அந்தந்த ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் வருகை மற்றும் பணி பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்யும் பணி துவங்கி உள்ளது.