ஏழாவது சம்பள கமிஷனை அமைக்காவிட்டால் விரைவில் வேலை நிறுத்தம்: ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் எச்சரிக்கை

ரெயில்வே தொழிலாளர்களின் நலனுக்காக போராடி வரும் தொழிற்சங்கங்களில் 10.26 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் மிகப் பெரிய தொழிற்சங்கமாக கருதப்படுகிறது.


நேற்று புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷிவ் கோபால் மிஷ்ரா கூறியதாவது:-

ஏழாவது சம்பள கமிஷனை அமைக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அரசை நீண்ட காலமாக வற்புறுத்தி வருகிறோம்.

ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜுன் கார்கேவையும் சந்தித்து எங்கள் கோரிக்கையை தெரிவித்தோம். இது தொடர்பாக, பரிசீலிப்பதாக மட்டும் கூறிய அவர், எங்களுக்கு எந்த உத்தரவாதத்தையும் தரவில்லை.

எனவே, எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவெடுத்துள்ளோம். வேலை நிறுத்தத்திற்கான தேதியை இறுதி செய்வதற்காக இதர தொழிற்சங்கங்களுடன் பேசி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அகில இந்திய ரெயில்வே தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பற்றி ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜுன் கார்கேயிடம் கேட்ட போது, ‘எனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது. நான் இப்போது தான் மந்திரியாக பொறுப்பேற்று உள்ளேன்’ என்று பதிலளித்தார்.

Popular Posts