சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையடுத்து, தமிழகத்தில் அரசு மேல்நிலைப்
பள்ளிகளில் பணிபுரிந்த, 652 கணினி ஆசிரியர்களை, தமிழக அரசு பணி நீக்கம்
செய்தது. இதனால், ஏழு ஆண்டுகளாக, கணினி ஆசிரியர்கள் பணியில் நிலவி வந்த
போராட்டம் முடிவுக்கு வந்தது.
தமிழகத்தில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 1999ம் ஆண்டு, 2,324 கணினி ஆசிரியர்கள், 1,500 ரூபாய் சம்பளத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். பின், 2004ல், 2,000 ரூபாய் தொகுப்பூதியத்திற்கு மாற்றப்பட்டனர்.இதையடுத்து, பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து, 2006ம் ஆண்டு, 1,850 கணினி ஆசிரியர் பணியிடங்களை புதிதாக தோற்றுவித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த, அரசு உத்தரவிட்டது.இத்தேர்வில், கணினி ஆசிரியர்கள், 1,714 பேர் தேர்வு எழுதினர். முதலில், தேர்வு பெற, 50 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும் என, அரசு அறிவித்தது. பின், இத்தேர்வு மதிப்பெண்ணில் விலக்கு அளித்து, 35 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் என, அறிவித்தது. இதன்படி, 35 சதவீத மதிப்பெண் பெற்ற, 1,686 கணினி ஆசிரியர்கள், தேர்வில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், பி.எட்., முடித்த கணினி பட்டதாரி ஆசிரியர் சங்கம், தேர்ச்சி மதிப்பெண்ணை, 50 சதவீதத்தில் இருந்து, 35 சதவீதமாக அரசு குறைத்ததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், 894 பேர் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.தொடர்ந்து, 35 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை பெற்ற 792 ஆசிரியர்கள், மறுதேர்வு எழுத வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த 2010, ஜனவரி 24ம் தேதி, 792 பேருக்கு மறுதேர்வு நடத்தியது.
அதில், 125 பேர் தேர்வு பெற்றனர்; மீதமுள்ள 667 பேர், தேர்வில் தோல்வியடைந்தனர். "வினாத்தாள் குளறுபடியால், தேர்வில், அதிகளவில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டது. எனவே, கேள்வித்தாளை சரிபார்க்க வேண்டும்' என, ஐகோர்ட்டில், மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.இதை விசாரித்த ஐகோர்ட், வினாத்தாள் ஆய்வு செய்ய, ஐ.ஐ.டி., கணினி ஆசிரியர் குழுவை அமைத்தது. இக்குழு, 150 கேள்விகளில், 20 கேள்விகள் தவறு என்றும், ஏழு கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க முடியவில்லை எனவும் அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து, ஐகோர்ட், தேர்வெழுதிய, 667 பேரில், 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்ய உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், 667 ஆசிரியர்களில் இருந்து, 15 பேர் மட்டுமே தேர்வு பெற்றனர். இதையடுத்து, பி.எட்., ஆசிரியர் சங்க வழக்கின் அடிப்படையில், தகுதியில்லாத, 652 பேரை பணி நீக்கம் செய்ய, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தொடர்ந்து, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வந்த, 652 கணினி ஆசிரியர்களை, பள்ளிக் கல்வித் துறை நேற்று முன்தினம், பணி நீக்கம் செய்தது.
இதுகுறித்து, மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம், மாநிலத் தலைவர் செல்வகுமார் கூறுகையில், ""டி.ஆர்.பி.,யின் குளறுபடியான கேள்வித்தாள், அதிகளவிலான ஆசிரியர்கள் தோல்விக்கு காரணம். பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கணினி ஆசிரியர்களும், இப்பணிக்குரிய அனைத்து கல்வித் தகுதிகளையும் பெற்றுள்ளவர்கள். எனவே, கருணை அடிப்படையில், பணி வழங்க அரசு முன்வர வேண்டும்,'' என்றார்.
நன்றி : தினமலர்