"பள்ளி மாணவர்கள் பாதுகாப்பில் அனைவருக்கும் பங்குண்டு"


 "போலீஸ், போக்குவரத்துத் துறை, பெற்றோர், பள்ளி நிர்வாகம், வாகன நிர்வாகிகள் என அனைவரும் தங்கள் வேலையையும், பொறுப்பையும் உணர்ந்து செயல்பட்டால் விபத்துக்களை தடுக்கலாம் என்று போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா தெரிவித்தார்.

    சென்னை, சேலையூரில் சீயோன் பள்ளி மாணவி ஸ்ருதி, பள்ளி பஸ்சில் செல்லும்போது அதில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, வாகனம் மோதி பள்ளி மாணவர்கள் இறப்பு என்பது தினசரி கதையாகிவிட்டது. தினமும் காலையில் எழுந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மீண்டும் வீடு திரும்புவதை பெற்றோர் எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். முந்தைய விபத்துக்களை தொடர்ந்து, அம்பத்தூரில் பள்ளி மாணவி பெரியநாயகி, தண்ணீர் லாரி மோதி பலியான சம்பவம், அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

   இதுதொடர்பாக, சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோராவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: விபத்துகளில் பள்ளி மாணவர்கள் இறப்பு சென்னையில் அதிகரித்து வருகிறது.

விபத்துக்களை குறைக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
பள்ளி நிர்வாகங்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களிடமும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறோம். குழந்தைகளை வாகனங்களில் ஏற்றி விடும்போது அவர்கள் பாதுகாப்பாக செல்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பெற்றோருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆட்டோக்கள், வேன் ஓட்டுனர்களுக்கும் பள்ளி மாணவர்களை ஏற்றுவது தொடர்பாக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரமுடியுமா? இந்த விஷயத்தில் ஒருவர் மட்டும் சம்பந்தப்படவில்லை. பெற்றோர், குழந்தைகள், பள்ளி நிர்வாகம், பள்ளி வாகன ஓட்டுனர், போலீஸ், போக்குவரத்துத் துறை என அனைவரும் இந்த விஷயத்தில் கடமைப்பட்டவர்கள்.

    பெற்றோர் தங்கள் பிள்ளைகளை உரிய போக்குவரத்து வாகனங்களில் அனுப்ப வேண்டும். பாதுகாப்பிற்கான அம்சங்கள் வாகனங்களில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதிக பாரம் ஏற்றும் ஆட்டோக்களில் குழந்தைகளை ஏற்றி விடக் கூடாது. மாணவர்களுக்கும் போக்குவரத்து விதிகள் அவற்றை கடைப்பிடிப்பது குறித்து பெற்றோர் விளக்க வேண்டும். பள்ளிகளும் இந்த விஷயத்தில் பொறுப்புடன் நடக்க வேண்டும்.

    பெற்றோர், வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள், பள்ளிகள் விதி மீறும் போது போலீசும், போக்குவரத்துத்துறையும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பெற்றோர், மாணவர்கள், பள்ளி நிர்வாகம், வாகன உரிமையாளர்கள், போலீசார், போக்குவரத்துத்துறை என அனைவரும் கடமையை உணர்ந்து, பொறுப்புடன் பணியாற்றினால் பாதுகாப்பை உறுதி செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Popular Posts