மாணவர்களை தங்களின் பிள்ளைகளாக ஆசிரியர்கள் எண்ண வேண்டும் என்று அமைச்சர் சிவபதி பேசினார். தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றிய, 370 ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கினார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி, சிறப்பாக பணியாற்றிய, 370 ஆசிரியர்களுக்கு, தமிழக அரசின், "ராதாகிருஷ்ணன் விருது" வழங்கும் விழா, சென்னையில் நடந்தது. துறை முதன்மைச் செயலர் சபிதா தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் வரவேற்றார்.
ஆசிரியர்களுக்கு, "ராதாகிருஷ்ணன் விருது" வழங்கி, அமைச்சர் சிவபதி பேசியதாவது: நானும் ஒரு ஆசிரியர் குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். அந்த வகையில் எனக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவியை வழங்கிய, முதல்வருக்கு நன்றி கூறுகிறேன். விருது பெற்ற ஆசிரியர் அனைவருமே, வயது முதிர்ந்தவர்களாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்தவர்களாக இருக்கிறீர்கள். உங்களது திறமையையும், உழைப்பையும் கவுரவிக்கும் வகையில், இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையின் மீது, முதல்வர் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். எப்போதும் இல்லாத அளவிற்கு, இத்துறையில், முதல்வர் மாபெரும் புரட்சியை செய்துள்ளார். மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள், புத்தகம், நோட்டுகள், காலணி, பென்சில் என, அனைத்தையும் வழங்கியுள்ளார். கல்வியை மட்டும் போதிக்காமல், அதனுடன், வாழ்க்கையையும், வாழ்வியல் தத்துவத்தையும், ஆசிரியர் கற்றுத்தர வேண்டும்.
ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும், ஆசிரியருக்கு விடுக்கிறேன். மாணவ, மாணவியரை, தங்கள் பிள்ளைகளாக பாவிக்க வேண்டும். அதேபோல், ஆசிரியர் கண்டித்தாலும், அது நல்லதற்குத்தான் என, மாணவர் எண்ண வேண்டும். ஆசிரியரை, பெற்றோராக கருதி, மாணவ, மாணவியர் செயல்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் சிவபதி பேசினார்.