ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுத விரும்பும் புதிய விண்ணப்பதாரர்களுக்கு வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 24) முதல் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 28) வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கும் மறுதேர்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்குவது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, இந்தத் தேர்வு அக்டோபர் 3-ம் தேதிக்குப் பதிலாக அக்டோபர் 14-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. தேர்வு நேரம், தேர்வு மையத்தில் எந்த மாற்றமும் இல்லை.
ஆசிரியர் தகுதி மறுதேர்வுக்குப் புதிதாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை ரூ.50 செலுத்தி விண்ணப்பதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்துக்கு... ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் இப்போது மறுதேர்வுக்கு புதிதாக விண்ணப்பிக்கக் கூடாது.
ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நேரடியாக விண்ணப்பங்களை அனுப்பக் கூடாது.
ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள தாளை மாற்ற விரும்பினால் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு செப்டம்பர் 28-க்குள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே சமர்ப்பித்த விண்ணப்பத்தின் நகல், ஹால் டிக்கெட் போன்றவற்றுடன் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
புதிய விண்ணப்பதாரர்கள், தாளை மாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆகியோருக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மட்டுமே ஹால் டிக்கெட் வெளியிடப்படும்.