தகவல் உரிமை பெறும் சட்டத்தில் தகவல் கொடுக்காத அதிகாரிக்கு அபராதம்:

வள்ளியூர் : தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் முறையான தகவல் கொடுக்காத தொடக்க கல்வி இயக்குநருக்கு 25 ஆயிரம் அபராதம் விதித்து தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு வழங்கியுள்ளது.வள்ளியூரில் செயல்பட்டு வரும் நான்குநேரி, ராதாபுரம் தாலுகா நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் தலைவர் விஜயகுமார் மாநில தொடக்க கல்வி இயக்குநரத்தில் உள்ள பொது தகவல் வழங்கும் அலுவலருக்கு உதவி தொடக்க கல்வி அலுவலர், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பணி குறித்தும், அவர்களின் பதவி உயர்வு, பணியிறக்கம் குறித்த தகவல்களையும் கேட்டு தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி மனு அனுப்பி கேட்டிருந்தார்.ஆனால் அவருக்கு மனு மீது உரிய தகவல் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மனுதாரர் பலதடவை நினைவூட்டும் கடிதம் அனுப்பியும் மாநில தொடக்க கல்வி இயக்குநரகத்தில் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த விஜயகுமார் இதுகுறித்து தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு புகார் செய்தார்.அதன்படி தமிழ்நாடு தகவல் ஆணையம் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் மாநில தொடக்க கல்வி இயக்குநரகத்தின் பொது தகவல் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் (நிர்வாகம்) சுதர்சனன் மனுதாரருக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் உரிய காலத்தில் தகவல் தராததாலும், பல நினைவூட்டும் கடிதம் அனுப்பிய பிறகு காலதாமதமாக தகவல் வழங்கியதாலும் இவ்வாணையம் முடிவு செய்து தகவல் உரிமை பெறும் சட்டத்தின்படி 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.அபராத தொகையை ஆகஸ்ட் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து அதன் விபரத்தை ஆணையத்திற்கு வரும் செப்டம்பர் 10ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு மாநில தொடக்க கல்வி இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.




Popular Posts