மத்திய அரசு ஊழியர்களுக்கான டி.ஏ.வை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க முடிவு..!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதுடன் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. மார்ச் மாதம் அறிவிக்கப்படும் உயர்வு ஜனவரி 1 ல் இருந்தும், செப்டம்பர் மாத உயர்வு ஜுலை 1 ல் இருந்தும் அமல்படுத்தப்படும். கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது.

 இதை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 90 சதவீதமாக உயர்ந்தது. மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால் நன்னடத்தை விதி அமலுக்கு வருவதற்கு முன்பாக அகவிலைப்படி உயர்வை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முறையும் 10 சதவீதத்துக்கு குறையாமல் அகவிலைப்படி உயர்த்தப்படும். 10 சதவீத அகவிலைப்படி உயர்வு அளித்தால் மொத்த அகவிலைப்படி 100 சதவீதமாக உயரும்.

வழக்கமாக அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டினால் அதனை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும். அடிப்படை சம்பளம் உயர்ந்தால் வீட்டுவாடகை, போக்குவரத்து முதலான இதர படிகளும் உயரும். இதன் காரணமாக அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்காமல் மத்திய அரசு தள்ளிப்போட்டு வந்தது. 

தற்போது 7 வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அகவிலைப்படியில் குறைந்தது 50 சதவீதத்தையாவது அடிப்படை சம்பளத்துடன்  இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்தால் 30 முதல் 35 சதவீதம் வரை சம்பளம் உயரும் என மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 30 லட்சம் ஓய்வூதியக்காரர்கள் பலன் அடைவார்கள் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Popular Posts