ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின் படி அமல்படுத்தப்பட்ட ஊதிய விகிதங்களில் முரண்பாடுகள் உள்ளதாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டின.முரண்பாடுகளை களைய தமிழக அரசு 3 நபர் குழுவை அமைத்தது. இந்த குழுக்களின் பரிந்துரைகள் கடந்த ஜூலை மாதம் 52 அரசு ஆணைகளாக வெளியிடப்பட்டன.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் தரப்பில் மூன்று ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏற்கெனவே நிர்ணயித்து வழங்கப்பட்ட அடிப்படை ஊதியத்தை அரசு ஆணையின் அடிப்படையில் திடீரென குறைக்கக் கூடாது என அந்த மனுவில் கூறப்பட்டது. இது தொடர்பாக நிதித்துறை செயலாளர் சண்முகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: ஐகோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் அரசு ஊழியர் களுக¢கு ஜனவரி மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படாது என அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
வழக்கு நிலுவையில் உள்ளதால் அடிப்படை ஊதியம் குறைத்து உத்தரவிடப்பட்ட ஊழியர்களுக்கு ஜனவரி மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது. ஏற்கனவே வழங்கப்பட்ட ஊதியத்தையே ஜனவரி மாதத்திற்கும் வழங்க வேண்டும் என அந்தந்த துறைகளின் சம்பள கணக்கு அலுவலர்கள், மாவட்ட கருவூலம், சார் நிலை கருவூலங்களில் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.