அவதூறான வார்த்தைகளுடன் தகவல் கேட்டவர் மீது நடவடிக்கை; தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு

அவதூறான வார்த்தைகளுடன் தகவல் கேட்டு விண்ணப்பம் செய்தவர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அவதூறு வரிகள்
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே முளகுமூட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஹோமர்லால். இவர், தமிழ்நாடு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசு அலுவலகம் குறித்து விவரங்களை கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அப்பீல் செய்தார். அந்த அப்பீல் மனுவில், ‘தகவல் தர மறுப்பவர்களுக்கும், தவறு செய்பவர்களுக்கும் துணை செய்து, தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்களுக்கும் தவறான தகவல் தருபவர்கள் விபசாரிகளின் புரோக்கர்களுக்கு சமமானவர்கள்’ என்றும் ‘லஞ்சம் வாங்குபவனும், ஊழல் செய்பவனும் தன் மனைவியை மட்டுமல்ல, தனது உறவு பெண்களையும் வாடகைக்கு விடுவதற்கு சமமானவன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
கோர்ட்டு அவமதிப்பு
இவ்வாறு அவதூறு வாசகங்களுடன் மனு அனுப்பியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு தகவல் ஆணையம், இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க மாநில தலைமை தகவல் ஆணையர் கே.எஸ்.ஸ்ரீபதி, மாநில தகவல் ஆணையர்கள் பி.நீலாம்பிகை, எஸ்.எப்.அக்பர் ஆகியோர் கொண்ட முழு அமர்வு முடிவு செய்தது.
பின்னர், இதுகுறித்து விசாரணை நடத்திய இந்த அமர்வு பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:–
தகவல் ஆணையம் என்பது, குடிமக்களுக்கு தேவையான அனைத்து விவரங்களை வழங்குவதற்காக பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே மக்களுக்கு தகவல் வழங்கவும், வழங்கப்பட்ட தகவல் சரியானதுதானா? என்பதை உறுதி செய்வதற்காகவும் மட்டுமே தகவல் ஆணையம் உள்ளது.
அதிகாரம் உள்ளது
ஆனால், மனுதாரர் தன்னுடைய மனுவில் அசிங்கமான, அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி, தகவல் கேட்டுள்ளார். இவ்வாறு அவதூறான வார்த்தைகளுடன், விவரம் கேட்பதற்காக, இந்த சட்டம் கொண்டுவரப்படவில்லை. எனவே அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்கிறோம்.
கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தில், ‘கோர்ட்டு’ என்ற வார்த்தைக்கு நீதி பரிபாலனம் செய்யும் அமைப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் ஆணையமும், நீதி பரிபாலனம் செய்யும் அமைப்பு என்பதால், இந்த ஆணையத்துக்கு கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.
மன்னிப்பு
இதன்படி இந்த மனுவை விசாரிக்க முடிவு செய்து, மனுதாரர் ஹோமர்லாலை 2013–ம் ஆண்டு செப்டம்பர் 11–ந் தேதி நேரில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும், அதனால் தன்னால் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும் மனுவில் அவதூறான வார்த்தைகளை குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கேட்டும் மனுதாரர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
மனுதாரர், தகவல் கேட்டு கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ள அசிங்கமான வாசகங்கள், இந்த ஆணையத்தின் நன்மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் விதமாக உள்ளது.
கண் துடைப்பு
இதனால், அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்கிறோம். அவர் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது எல்லாம் வெறும் கண் துடைப்புக்குத்தான்.
எனவே, மனுதாரர் ஹோமர்லால் மற்றும் அவரது கே.எச்.லா அசோசியேட்ஸ் பெயரில் அனுப்பும் மனுக்கள், அப்பீல் மனுக்களை தகவல் ஆணையத்தின் பதிவுத்துறை இனி ஏற்க கூடாது. மேலும், அவதூறான வார்த்தைகளை மனுவில் எழுதியதற்கு மனுதாரர் ஹோமர்லால் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Popular Posts