புதிதாக தேர்வான, 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஜனவரியில் ஐந்து நாள் பயிற்சி அளிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியை, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்ககம் வழங்குகிறது. தொடக்க கல்வித்துறையில் சேர்ந்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் சார்பில், பயிற்சி வழங்கப்பட உள்ளது.
டி.இ.டி., தேர்வு வழியாக, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், 18 ஆயிரம் பேர், முதுகலை தேர்வில், 2,308 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, கடந்த, 13ம் தேதி, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் அனைவரும், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், பணியில் சேர்ந்து விட்டதாக, தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. முதுகலை ஆசிரியர்களுக்கு மட்டும், இன்னும், பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படவில்லை.
ஓரிரு நாளில், "ஆன்-லைன்" வழியில், கலந்தாய்வு நடத்தி, பணி ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட உள்ளன. எனவே, தேர்வு பெற்ற, 20 ஆயிரம் பேருக்கும், ஜனவரியில், ஐந்து நாள் பயிற்சியை வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியை, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்ககம் வழங்குகிறது. கல்லூரி ஆசிரியர்கள், அனுபவம் வாய்ந்த பள்ளி ஆசிரியர்களால், பாட சம்பந்தமாக, மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், முப்பருவ கல்விமுறை, தொடர் மதிப்பீட்டு முறை, மாணவர்களுக்கான, மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து, இரு நாட்களுக்கும், பயிற்சி அளிக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தொடக்க கல்வித்துறையில் சேர்ந்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் சார்பில், பயிற்சி வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கும், ஐந்து நாள், பயிற்சி அளிக்கப்படும்.