அரசு பள்ளிகளில் தமிழுக்கு கெட்அவுட், ஆங்கிலத்துக்கு கட்அவுட்டா?: தமிழக அறிஞர்களின் கூட்டமைப்பு

சென்னை: அரசு தொடக்கப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என்று தமிழக அறிஞர்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் குமரி அனந்தன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,
தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்நிலையில் மாநில அரசு நடத்தும் துவக்கப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வியை புகுத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் ஆகும்.
அனைத்து பாடங்களையும் தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்பது சான்றோர்களின் எண்ணம். அவர்களின் எண்ணத்தைப் புறக்கணிக்கும் வகையில் உள்ள இந்த திட்டத்தால் தமிழ் நெஞ்சங்கள் கொதித்துள்ளன. தமிழகத்தில் தாய்மொழியாம் தமிழை புறக்கடையில் நிறுத்திவிட்டு ஆங்கில ஆதிக்கத்துக்கு முக்கியத்துவம் தரும் தமிழக அரசின் இந்த திட்டத்தை கண்டிக்கிறோம்.
தமி்ழ் மொழியைக் காத்து, குழந்தைகளின் வாழ்வு வளம் பெற தமிழ் வழிக்கல்வியையே தொடர வேண்டும் என்றும், ஆங்கில வழிக்கல்வித் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.

Popular Posts