ஆகஸ்ட் மாதம், 31ம் தேதிக்குள், புதிய காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டைகளை தயாரித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது


புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான, புதிய அடையாள அட்டையை, வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள், அரசு ஊழியர்களுக்கு வழங்க, சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    நான்கு ஆண்டு காலத்திற்கு...தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்காக நான்கு ஆண்டு காலத்திற்கு, நான்கு லட்சம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கான, காப்பீடு வழங்கும், புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய, தேசிய அளவில் ஒப்பந்தம் கோரப்பட்டது. தொடர்ந்து, "தி யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிட்' நிறுவனம், வரும் ஜூலை முதல் தேதி முதல், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக, தேர்வு செய்யப்பட்டது.
  
    புதிய அரசாணை: ஏற்கனவே, அமலில் உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டம், கடந்த, 2008ம் ஆண்டு, ஜூலை 11 முதல் துவக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் செயல்படுத்தப்பட்டு, கடந்த மாதம், 10ம் தேதியுடன், முடிவடைந்துள்ளது. புதிய திட்டம், வரும் ஜூலை 1ம் தேதி முதல் துவக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இத்திட்டத்திற்கு முதற்கட்டமாக, ஐந்து கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், பயன் பெறும் அரசு ஊழியர்களுக்கு, புதிய திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக, புதிய அரசாணை ஒன்றை நிதித்துறை பிறப்பித்துள்ளது.

     புதிய நடைமுறைகள்: இதன் படி, பழைய காப்பீட்டு திட்டத்தில் இருப்பவர்களும், சமீபத்தில் அரசு பணியில் சேர்ந்தவர்களும், புதிய திட்டத்தின் கீழ் இணைவதற்கான, விண்ணப்பங்கள் பெறுதல், பூர்த்தி செய்தல், புதிய அட்டை வழங்குதல் தொடர்பான நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம், அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்களை, அரசு அலுவலகங்களில் உள்ள, சம்பளக் கணக்கு அதிகாரிகளுக்கு, அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள், தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, அந்த விண்ணப்பத்தை அளித்து, பூர்த்தி செய்து, பெற்று, மீண்டும், காப்பீட்டு நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.

    20ம் தேதிக்குள் விண்ணப்பம்: இதில், ஏற்கனவே பயன்பெறும் ஊழியர்கள், புதியதாக சேர்ந்துள்ள ஊழியர்கள், என அனைவரும், தங்கள் குடும்பத்தினர் பற்றிய தகவல்களுடன், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ,வரும் 20ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அளிக்கவேண்டும். அந்த விண்ணப்பங்களை, இம்மாதம் 31ம் தேதிக்குள், காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

     விண்ணப்பத்தை பெறும் காப்பீட்டு நிறுவனம், ஆகஸ்ட் மாதம், 31ம் தேதிக்குள், புதிய காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டைகளை தயாரித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.ஒரு வேளை புதிய அடையாள அட்டையை தொலைத்து விட்டால், 50 ரூபாய் செலவில், புதிய அட்டையை, ஊழியருக்கு, காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. மேலும், காப்பீடு தொடர்பான தகவல்கள், அளிக்கப்படும் மருத்துவ சேவைகள், காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் குறித்த விவரங்களை, www.tn.gov.in/karuvoolamஎன்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

Popular Posts